மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

சட்டமன்றத்தில் தனித்துவம்!

 சட்டமன்றத்தில் தனித்துவம்!

சட்டப்பேரவையில் மனித நேயர் சைதை துரைசாமி என்ற பாதையில் இப்போது போய்க் கொண்டிருக்கிறோம். இதை ஒட்டி, 'சட்டப்பேரவையில் சைதை துரைசாமி' என்ற புத்தகத்தை எழுத்தாளர் ஜீவபாரதி வெளியிட்டிருக்கிறார் என்றும், அதில் சைதை துரைசாமி பற்றி பத்திரிகையாளர்கள் சோ, லேனா தமிழ்வாணன் ஆகியோர் என்ன குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்த்தோம்.

எழுத்தாளர் ஜீவபாரதி தமிழக சட்டமன்றத்தின் பல மாண்பு மிக்க வரலாறுகளை தொகுத்துப் புத்தகமாக கொடுத்திருப்பவர் . மூத்த கம்யூனிஸ்டு தலைவர் ஜீவா, பசும்பொன் தேவர் ஆகியோர் சட்டமன்றத்தில் ஆற்றிய அரும்பணி பற்றி, 'சட்டப்பேரவையில் ஜீவா', 'சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர்' என்ற புத்தகங்களைத் தொகுத்து எழுதியவர் திரு. ஜீவபாரதி.

இவர்கள் மட்டுமல்ல பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் சட்டமன்றத்தில் பேசிய பேச்சுகளை தொகுத்து, 'சட்டப்பேரவையில் அருட்செல்வர்' என்ற தலைப்பில் புத்தகமாக்கினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் இருந்து தொடர்ந்து ஐந்து முறை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர். அழகர்சாமியின் சட்டமன்றப் பணிகளைப் பற்றி அவரது 80 வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், 'சட்டப் பேரவையில் அழகர்சாமி ' என்ற நூலை எழுதி வெளியிட்டார்.

தோழர் அழகர்சாமியை பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொண்டிருக்கும்போதுதான் சட்டமன்றக் குறிப்பேடுகளில் சைதை துரைசாமி அவர்களின் பேச்சு பற்றிய பதிவுகளைப் பார்த்திருக்கிறார் எழுத்தாளர் ஜீவபாரதி.

"மேலெழுந்தவாரியாக படித்தபோதே திரு. சைதை துரைசாமி அவர்களின் உரைகள் என்னுள் அதிர்வுகளை ஏற்படுத்தின. அதனால் அவருடைய உரைகள் அனைத்தையும் நகல் எடுத்துக்கொண்டு அமைதியாக வீட்டுக்குக் கொண்டுவந்து படித்தேன்.

அப்போது, அந்த உரைகளை நூலாக்க வேண்டும். அதன் மூலம் ஒரு மக்கள் தொண்டரின் சிந்தனைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.அதன் விளைவுதான், சட்டப் பேரவையில் சைதை துரைசாமி' என்ற நூல்" என்கிறார் ஜீவபாரதி.

அந்தப் புத்தகத்தின் தன்னுரையில் இதைக் குறிப்பிட்டிருக்கும் ஜீவபாரதி மேலும் குறிப்பிடுகிறார்.

"1985 ஜனவரி முதல் 1987 டிசம்பர் மாதம் வரையிலான மூன்றாண்டுகள் மட்டுமே சட்டப்பேரவை உறுப்பினராக செயல்படும் வாய்ப்பு சைதை துரைசாமிக்கு வாய்த்தது. இந்த மூன்றாண்டு கால எல்லைக்குள் அதுவும், அவரது கட்சியே ஆளுங்கட்சியாக இருந்தபோதும், இத்தனை பிரச்னைகளைப் பேரவையில் எழுப்ப முடியும் என்பதை சைதை துரைசாமி மெய்ப்பித்திருக்கிறார்.

சைதை துரைசாமிக்கு முன் பல உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் மிகச் சிறப்பாக பணியாற்றியிருப்பதையும் , தொகுதி மக்கள் பிரச்னையை வலுவாக எழுப்பி வந்திருக்கிறார்கள் என்பதையும் நான் அறிவேன். அவர்கள் எல்லாம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து குரல் கொடுத்தவர்கள். ஆனால் ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்து கொண்டு இவ்வளவு பிரச்னைகளைப் பேரவையில் எதிரொலிக்க முடியும் என்பதை தன்னுடைய அறிவாற்றலால், மக்கள் மீது கொண்ட பாசத்தால் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் திரு. சைதை துரைசாமி.

1985 மார்ச் 12 அன்று…

"சைதை பெருமாள் கோயிலுக்கு சொந்தமான திருக்குளத்தையும், மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயிலுக்குச் சொந்தமான பெரிய குளத்தையும் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?" என்று கேள்வி நேரத்தின்போது திரு. சைதை துரைசாமி சட்டப்பேரவையில் வினா தொடுத்திருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில் இதன் மூலம்தான் சைதை துரைசாமியின் குரல் முதன் முதலாக ஒலித்திருக்கிறது.

1985 மார்ச் 13 அன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவித்து முன்மொழிந்த தீர்மானத்தை வழிமொழிந்து பேசுகிற வாய்ப்பு சைதை துரைசாமிக்குக் கிடைத்தது. இதுதான் தமிழக சட்டப்பேரவையில் ஒலித்த அவரது கன்னிப்பேச்சாகும்.

அப்போது நடந்து முடிந்த தேர்தல் வெற்றி பெற்றியும், ஆளுநர் உரை பற்றியும் எதிர்க்கட்சியினர் எடுத்து வைத்த கருத்துகளுக்கு தன் கட்சி சார்ந்த கருத்துகளை தெரிவித்த சைதை துரைசாமி அத்துடன் தனது உரையை முடித்துக் கொள்ளவில்லை.

அந்த உரையிலேயே தனக்கு வாக்களித்த சைதை தொகுதி மக்களின் கோரிக்கைகளையும் சைதை துரைசாமி சட்டப் பேரவையிலே வலுவாக எடுத்து வைத்திருக்கிறார். இந்தப் போக்கு அவர் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய மூன்று ஆண்டுகளுக்கும் தொடர்ந்து நீடித்திருப்பதுதான் திரு. சைதை துரைசாமியின் தனித்துவம் ஆகும் " என்கிறார் ஜீவபாரதி.

மாபெரும் மக்கள் தலைவர் ஜீவா,. தேசியமும் தெய்வீகமும் கண் என போற்றிய பசும்பொன் தேவர்., அல்லும் பகலும் மக்களுக்காக உழைத்த கோவில்பட்டி அழகர் சாமி, அருட்செல்வர் என்று அழைக்கப்பட்ட பொள்ளாசி மகாலிங்கம் ஆகியோரது வரிசையில் திரு. சைதை துரைசாமியின் சட்டமன்ற உரைகளையும் தொகுத்திருக்கிறார் எழுத்தாளர் ஜீவபாரதி.

இப்போது தெரிகிறதா மனித நேயர் திரு. சைதை துரைசாமி அவர்களின் பண்பு நலன்.

சட்டப்பேரவையில் இவர் ஆற்றிய மூன்றாண்டு பணிகள் பற்றி பேசிக் கொண்டே போகலாம்!

கருத்துகளை தெரிவிக்க... [email protected]

வளரட்டும் மனித நேயம்

விளம்பர பகுதி

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon