மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

தர்க்கப் போராளி!

 தர்க்கப் போராளி!

ராமானுஜரின் வாதத் திறமைக்கு சான்று தேவையில்லை. சூரியனை யாரும் சுட்டிக்காட்டத் தேவையில்லை . சூரிய ஒளிதான் நமக்கு அனைத்துப் பொருட்களையும் சுட்டிக்காட்டும். அதுபோல ராமானுஜரின் வாதத் திறமைக்கு யாரும் சான்றிதழ் தரத் தேவையில்லை.

காஷ்மீர தேசத்தில்...அந்த தேசத்து ராஜாவின் முன்னிலையிலே அத்வைதிகளோடு ராமானுஜர் சொற்போர் நடத்தினார். அத்வைதிகளோடு வாதம் செய்து விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டினார். அரசனும் மற்ற வித்வான்களூம், உம்முடைய சித்தாந்தத்தை சிறந்தது என்று நிரூபித்துவிட்டீர் என்று தலைகவிழ்ந்தனர்.

இது காஷ்மீர்!

இதோ நம் மதுரை அருகே இருக்கும் திருமாலிருஞ்சோலை அழகர் கோயிலுக்கு அழகரை மங்களாசாசனம் செய்ய ராமானுஜர் சென்றார். மாலிருஞ்சோலைக்கு ராமானுஜர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு மதுரையைச் சேர்ந்த சைவப் புலவர்கள் திரண்டு மாலிருஞ்சோலைக்கு வந்தனர். ராமானூஜரைப் பார்த்து...

"எங்களோடு மோதிப் பார்க்க வருகிறீர்களா? சிவனே பரத்வம் என்று நாங்கள் நிரூபிக்கிறோம். நாராயணனே பரத்துவம் என்று நீங்கள் நிரூபிக்கிறீர்களா?” என்று ராமானுஜரிடம் சவால் விட்டனர்.

ராமானுஜர் புன்னகைத்துக் கொண்டே சொற்போர் புரிந்தார். அவர் எடுத்து வைத்த கிரந்தங்கள், பிரமாணங்கள் சைவர்களை திணறடித்தன. 'நீர் பெரும் பண்டிதரே என்பதை ஒப்புக் கொள்கிறோம்’ என்று சரணடைந்தனர்.

இவ்வாறு காஷ்மீர் முதல் நமது மதுரை வரை ராமானுஜர் வாதம் செய்யாத இடமில்லை. அவருடைய விரிவான வேதாந்த அறிவும், ஆழமான ஞானமும், நாராயணனிடம் கொண்ட தாழ்மையான சரணாகதியும் ராமானுஜரை எங்கும் வெற்றியாளனாக்கின.

இப்படிப்பட்ட ராமானுஜரிடம் வாதம் செய்யத்தான் யக்ஞமூர்த்தி புறப்பட்டார்.

ராமானுஜர் எப்படிப்பட்ட வாதி என்பது யக்ஞ மூர்த்திக்கு தெரியும். பண்டிதர்களுக்கே குழப்பமான கடினமான கருத்துகளை கூட ராமானுஜரால் எளிதில் புரியவைக்க முடியும். அதனால்தான் ராமானுஜர் அறிவுலகத்திலும் போற்றப்பட்டார். பாமர உலகத்திலும் போற்றப்பட்டார். காரணம் அறிவு எல்லாமே பாமரனை சென்று சேர வேண்டும் என்ற கொள்கை கொண்டவர் ராமானுஜர்.

அவரது வாதங்களில் இன்னொரு முக்கியமான விஷயம்… தான் ஜெயிப்பது என்பதை விட தான் சார்ந்திருக்கும் சித்தாந்தம் விசிஷ்டாத்வைதம் ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் வாதாடுவார். ஆனால் அதையும் தாண்டி விசிஷ்டாத்வைதம் புரியாதவர்கள் கூட ராமானுஜரை அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு ராமானுஜரின் புகழ் பரவியது.

பாரத தேசம் முழுதும் தனது விசிஷ்டாத்வைத கொள்கைப்பாட்டை உயர்த்திப் பிடித்தவர். அதனால்தான் ராமானுஜர் பற்றி அறிந்த யக்ஞ மூர்த்தி ஸ்ரீரங்கத்துக்குப் புறப்பட்டார்

ராமானுஜரை வாதில் வெல்ல வேண்டும், என்ற நோக்கத்தோடு புறப்பட்ட யக்ஞ மூர்த்திக்கு ராமானுஜரின் வாத திறமை பற்றி நன்கு தெரிந்திருந்தது. எங்கே சென்றாலும் சில கிரந்தங்களை மட்டுமே தன்னோடு எடுத்துச் செல்லும் யக்ஞ மூர்த்தி… ராமானுஜரோடு வாதம் செய்யப் போகிறோம் என்ற எச்சரிக்கை உணர்வைப் பெற்றிருந்தார். ராமானுஜர் எத்தனை படித்தவர், எத்தனை படைத்தவர் என்பதெல்லாம் அவருக்குத் தெரியும். அதனால் யக்ஞ மூர்த்தி தான் இதுவரை படித்த, படைத்த அனைத்து கிரந்தங்களையும் தனது சிஷ்யர்களை வைத்து தூக்கிக் கொண்டு ஸ்ரீரங்கத்துக்குப் புறப்பட்டார்

அப்போது சிஷ்யர்கள் தங்களது ஆசாரியரான யக்ஞ மூர்த்தியிடம், 'சுவாமி… இவ்வளவு கிரந்தங்களையும் தூக்கிக் கொண்டு செல்கின்றோமே… ஸ்ரீரங்கத்தில் ஏதேனும் பாடசாலை ஆரம்பிக்கப் போகிறீர்களா?" என்று கேட்டனர்.

அப்போது யக்ஞ மூர்த்தி சொன்னார், "பாடசாலை ஆரம்பிக்க வில்லை. நடமாடும் பாடசாலையாகவே இருக்கிற ராமானுஜர் என்ற மகா வித்வானோடு விவாதிக்கப் போகிறேன். அதனால்தான் அனைத்து கிரந்தங்களையும் எடுத்துக் கொண்டு போகிறோம்" என்று விளக்கமளித்தார்.

பல நாட்கள் பயணம் கடந்து யக்ஞ மூர்த்தி ஸ்ரீரங்கத்தை அடைந்தார்.

சேரன் மடத்தை அடைந்த யக்ஞ மூர்த்தி தான் ராமானுஜருடன் தர்க்கத்தில் ஈடுபட வந்திருப்பதை சிஷ்யர்களிடம் சொன்னார். சிஷ்யர்கள் ராமானுஜரிடம் சொன்னார்கள். ராமானுஜர் யக்ஞ மூர்த்தியை உள்ளே அழைத்தார். உபசரித்தார்.

"தங்களைப் பற்றி காசியில் குறிப்பிட்டு, உம்மை ஜெயிக்க முடியுமா என்று கேட்டார்கள். அதனால்தான் உம்மோடு வாதிட்டு உம்மை ஜெயிக்க வந்திருக்கிறோம்’ என்றார் யக்ஞ மூர்த்தி.

ராமானுஜர் புன்னகைத்தார். ராமானுஜரின் சிஷ்யர்கள் சிரித்தனர்.

திரும்பிய ராமானுஜர், தன் முதன்மை சிஷ்யர்களைப் பார்த்து, 'விவாதத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று சொன்னார்.

ராமானுஜர் மாற்று சித்தாந்தம் கொண்டவர்களை மதிப்பதில் தலை சிறந்தவர். யாதவப் பிரகாசர் என்ற அத்வைதியிடம் தான் வேதம் கற்றபோது, அவர் வேதங்களை தவறாகச் சொன்னபோதும் கூட தன் ஆசாரியர் இப்படி தவறாக சொல்கிறாரே என்று அழுதவர். அதற்குப் பிறகே தவறை சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில் தன்னைப் பற்றி அறிந்து ஆந்திர பிரதேசத்தில் இருந்து ஸ்ரீரங்கம் வரை வந்த யக்ஞமூர்த்தியை வரவேற்று, அவரோடு வாதிக்க சம்மதித்து வாதம் முடியும் வரை தன் விருந்தினராகவே அவரை ஸ்ரீரங்கத்தில் தங்க வைத்தார் ராமானுஜர்.

தர்க்க மண்டபத்தில் தேதி குறிக்கப்பட்டது. நாளை முதல் ராமானுஜரோடு வாதம் ஆரம்பம். யக்ஞ மூர்த்தி தனது கிரந்தங்களை எல்லாம் புரட்டிக் கொண்டிருந்தார்.

பொழுது விடிந்தால்... ஸ்ரீரங்கம் ஒரு சொற்போரை, சித்தாந்தப் போரைக் காணக் காத்துக் கிடந்தது.

ஆழ்வார்கள் அருளிச் செயல்களை பரப்புவதையே நோக்கமாகக் கொண்டு பூமிப் பந்து முழுதும் ராமானுஜரின் சித்தாந்தத்தை பரப்பிக் கொண்டிருக்கும் ஆழ்வார்கள் ஆய்வு மைய தலைவர் ஜெகத்ரட்சகன் வழியில் நாமும் காத்திருப்போம்.

விளம்பர பகுதி

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon