மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

டிஜிட்டல் திண்ணை: 185 கிடா... 500 நாட்டுக் கோழி... 5 ஆயிரம் முட்டை!- தினகரனின் தடபுடல் விருந்து

டிஜிட்டல் திண்ணை:  185 கிடா... 500 நாட்டுக் கோழி... 5 ஆயிரம் முட்டை!- தினகரனின் தடபுடல் விருந்து

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“தஞ்சாவூரில் இருக்கிறேன்!” என்பதுதான் முதலில் வந்த மெசேஜ். சற்று நேரத்துக்குப் பிறகு வந்து விழுந்தது அடுத்த மெசேஜ். “தனது மாமியார் சந்தான லட்சுமிக்குத் திதி கொடுக்கும் நிகழ்வுக்காக தஞ்சாவூர் போன தினகரன் அங்கேயே தங்கியிருக்கிறார். சின்ன மாமனார் திவாகரனுடன் இருந்த மன வருத்தங்களும் நீங்கி இருவரும் கைகோர்த்துவிட்டனர். திவாகரன் குடும்பத்துக்கு சொந்தமான பழைய வீடு தஞ்சாவூரில் இருக்கிறது. மிக பிரமாண்டமான அந்த வீட்டில்தான் துக்க நிகழ்வுக்கு வந்த ஒட்டுமொத்தக் குடும்பமும் தங்கி இருக்கிறது. தஞ்சாவூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தினகரனுக்கு ரூம் போடப்பட்டிருந்தது. ஆனால் அவரோ, ‘ஹோட்டல் வேண்டாம். நான் வீட்டுலயே தங்கிக்கிறேன். சொந்தக்காரங்களோட நான் நிறைய பேச வேண்டி இருக்கு...’ என்று சொல்லி அதைத் தவிர்த்துவிட்டாராம் தினகரன்.

காரியம், திதி எல்லாம் முடிந்துவிட்டன. நாளை, அதாவது ஞாயிறு அன்று கறி விருந்து வைக்க வேண்டும். கறி விருந்து என்பது இறந்து போன குடும்பத்துக்கு சம்பந்தி முறை உள்ளவர்கள் செய்ய வேண்டும். அதாவது தினகரன் குடும்பத்தினர் செய்ய வேண்டும். அதற்காகக் கடந்த சில நாட்களாகவே ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார் தினகரன்.

இதற்காக தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இருந்து 185 ஆடுகளை முதல் கட்டமாக வாங்கியிருக்கிறார்கள். தேவைப்பட்டால் உடனே கொண்டுவரும் வகையில் 50 ஆடுகள் தயார் நிலையில் இருக்கின்றன. 500 நாட்டுக் கோழி, 5 ஆயிரம் நாட்டுக் கோழி முட்டைகள் வாங்கப்பட்டிருக்கின்றன. விருந்தில் என்ன இருக்க வேண்டும் எனத் தனிப் பட்டியல் கொடுத்திருக்கிறார் தினகரன். ‘ரத்த பொறியல், குடல் வறுவல், தலைக்கறி, மூளை ஃப்ரை, ஈரல் ஃப்ரை, நல்லி எலும்பு, மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா, இதுவிர ஆம்பூர் பிரியாணி’ என்பது அவர் கொடுத்த லிஸ்ட்.

இதில் கறி வகைகளைச் சமைக்க தஞ்சாவூர் அருகே உள்ள ஒரத்தநாட்டில் இருந்து சமையல்காரர்களை நியமித்துள்ளனர். பிரியாணி சமைக்க மட்டும் ஆம்பூரில் இருந்து பிரியாணி மாஸ்டர் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

இன்று காலையில் சமையல்காரர்களுடன் தினகரனும், திவாகரனும் பேசியிருக்கிறார்கள். ‘விருந்து நம்ம சுத்து வட்டாரத்துலயே இல்லாத அளவுக்கு இருக்கணும். கூட்டம் அதிகமா வந்தால், அதை சமாளிக்க தயாரா இருக்கணும். எதுலயும் குறை இருக்கக் கூடாது’ என சொல்லி இருக்கிறார் தினகரன். இன்று மாலையிலிருந்தே சமையல் வேலைகள் தொடங்கிவிட்டன. நள்ளிரவிலிருந்து ஆடு, கோழிகளை வெட்டும் வேலைகள் தொடங்கிவிடுமாம்.

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள தனக்கு நெருக்கமானவர்களை எல்லாம் இந்த விருந்துக்கு அழைத்திருக்கிறார் தினகரன். அதேபோல திவாகரனும் அவருக்கு நெருக்கமானவர்களை அழைத்திருக்கிறார். தினகரனும், திவாகரனும் கைகோர்த்ததில் அவர்களுடைய குடும்பத்தினர் எல்லோருக்கும் சந்தோஷமாம். குறிப்பாக, தினகரன் மனைவி அனுராதாதான் இருவரையும் பேச வைத்து சேர்த்தும் வைத்தார் என்கிறார்கள். மாமியார் இறந்த சமயத்தில்கூட திவாகரனுடன் அதிகம் நெருக்கம் காட்டாமல்தான் இருந்தார் தினகரன். அதன் பிறகு அவரிடம் பேசிப் பேசி, கணவரையும், சித்தப்பாவையும் சேர்த்துவைத்தவர் அனுராதாதான். “ என்று முடிந்தது அந்த மெசேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.

தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது. “தினகரனும், திவாகரனும் சேர்ந்துதான் இனி பிஜேபி சொல்வதெற்கெல்லாம் தலையாட்டத் தேவை இல்லை, நாம் முடிவுகளை எடுப்போம் என முடிவெடுத்திருக்கிறார்கள். ‘அவங்க என்ன செஞ்சுட முடியும். எது வந்தாலும் பார்த்துக்கலாம். நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை தைரியமா செய்யுங்க...’ என திவாகரன் சொன்னதாக சொல்கிறார்கள்.

அதன் பிறகுதான் நேற்று காலையில் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை ஆசிரியருடன் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார் தினகரன். அதன் வெளிப்பாடுதான் இன்று நமது எம்.ஜிஆரில் பிஜேபியைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்த கவிதை. காவி அடி... கழகத்தை அழி ! என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் அந்தக் கவிதையில் பிஜேபியை பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். இனி தினமும், ஜெயா டிவிலும், நமது எம்.ஜி.ஆரிலும் பிஜேபி மீதான விமர்சனங்களை முன்வைக்க முடிவெடுத்துவிட்டாராம் தினகரன்.” என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டு, ஷேர் செய்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

சனி, 12 ஆக 2017

அடுத்ததுchevronRight icon