மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

பண மதிப்பழிப்பு : ரூ.1.7 லட்சம் கோடி டெபாசிட்!

பண மதிப்பழிப்பு : ரூ.1.7 லட்சம் கோடி டெபாசிட்!

மத்திய அரசின் நோட்டுகள் மீதான தடை அறிவிப்பு வெளியான பிறகு அசாதாரணமான முறையில் வங்கிகளில் ரூ.1.7 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டில் கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டுப் புழக்கத்தை ஒழித்துக்கட்டும் விதமாகக் கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி, புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.1,000 ஆகியவற்றைச் செல்லாதவையாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன் பின்னர் மதிப்பிழந்த இந்நோட்டுகளை மக்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தினர். மதிப்பிழந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்துவதற்கு டிசம்பர் 30 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.

பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் அசாதாரண வகையில் ரூ.1.7 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தனது தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நவம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு 1.8 கோடி புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டதாகவும், பிரதமரின் ‘ஜன் தன் யோஜனா’ திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை 48 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய நோட்டுகளை மக்கள் டெபாசிட் செய்துவந்த காலத்தில் நீண்ட காலமாகச் செயல்படாமல் இருந்த குறிப்பிட்ட சில வகை வங்கிக் கணக்குகளில் அசாதாரணமான முறையில் ரூ.1.7 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மற்ற கணக்குகளில் 2.8 முதல் 4.3 லட்சம் கோடி சாதாரணமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon