மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

நெடுவாசல்: வெற்றிலையில் சூடம் ஏற்றிப் போராட்டம்!

நெடுவாசல்: வெற்றிலையில் சூடம் ஏற்றிப் போராட்டம்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசல் கிராமத்தில் 123ஆவது நாளாகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இன்று (ஆகஸ்ட் 12) அந்தப் போராட்டம் நூதனமான வடிவத்தை எடுத்துள்ளது. மக்கள் வெற்றிலையில் சூடம் ஏற்றிப் போராட்டம் நடத்துகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார் கொல்லை, புல்லான்விடுதி , கோட்டைக்காடு ஆகிய கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவை கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி இரண்டாம் கட்டப் போராட்டம் தீவிரமாக நடந்துவருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டம் நடத்தி மத்திய அரசுக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் 123வது நாளான இன்று அப்பகுதி பெண்கள் மண்டியிட்டு வெற்றிலையில் சூடம் ஏற்றிப் போராட்டம் நடத்தினர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெறும் வரை ஓய மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

122ஆவது நாளான நேற்று(ஆகஸ்ட் 11), மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டக் களத்திற்கு அருகில் உள்ள அரசமரத்தடி பிள்ளையாரிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி தீபம் ஏற்றி வழிபட்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

விவசாயத் தொழில் அழிந்துவரும் நிலையில் தங்களது கிராமத்தைக் காப்பாற்றுவதற்காக தொடர்ந்து நெடுவாசல் மக்கள் போராடிவருகின்றனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இவர்களின் கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல் தொடர்ந்து மௌனம் சாதித்துவருகின்றன.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon