மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

கேள்வி ஞானம்: வெற்றிகரமான முதல் தடம்!

தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான மின்னம்பலமும் கோயமுத்தூர் எஸ்.வி.எஸ். பொறியியல் கல்லூரியும் இணைந்துகல்லூரி மாணவர்களுக்காக வழங்கிய, ‘கேள்வி ஞானம்’ நிகழ்ச்சி இன்று, ஆகஸ்டு 12ஆம் தேதி கோயம்புத்தூர் அரசம்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் எஸ்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் நடந்தது.

’கேள்வி ஞானம்’ களத்தின் முதல் நிகழ்ச்சி என்பதால் மாணவர்களுக்கும், மின்னம்பலம் குடும்பத்தாருக்கும் நிறையவே எதிர்பார்ப்புகள் இருந்தன. ஏற்கனவே அறிவித்தபடி நிகழ்ச்சி இன்று பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கியது.

காலையில் கல்லூரியின் வழக்கமான தேர்வுகளை முடித்துவிட்டு, தொடர் விடுமுறை வருவதால் சொந்த ஊர்களுக்குச் செல்லும் இன்பப் பரபரப்பில் இருந்த மாணவர்கள், அதையும் தாண்டிய ஆவலோடு மின்னம்பலம் தங்கள் கல்லூரியோடு இணைந்து நடத்தும் ’கேள்வி ஞானம்’ நிகழ்ச்சிக்கு திரண்டனர்.

பிரம்மாண்டமான கல்லூரி ஆடிட்டோரியத்தில், சுமார் 1,800 மாணவர்கள் திரண்டு வந்து, ’கேள்வி ஞானம்’ நிகழ்ச்சியின் வெற்றிக்குத் துவக்கத்திலேயே கட்டியம் கூறிவிட்டனர்.

கல்லூரியின் துணைத் தலைவர் ராகவேந்திரன் நிகழ்ச்சிக்கு வருகை தந்த பேச்சாளர்களை வரவேற்று மரியாதை செய்தார். மாணவர்களோடு பேராசிரியர்களும் முதல் வரிசையில் அமர்ந்து கேள்வி ஞானத்துக்கு சிறப்பு சேர்த்தனர்.

மாணவர்கள் சார்பில் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதையடுத்து பேசிய கவிஞரும் பேராசிரியருமான தமிழச்சி தங்கபாண்டியன், “தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான மின்னம்பலம் இளைஞர்களுக்காகவே துவக்கப்பட்டது. குறிப்பாக இன்று ஸ்மார்ட் போன்களை அதிகமாக பயன்படுத்தும் கல்லூரி மாணவ, மாணவிகளின் மனதில் ஆரோக்கியமான சிந்தனை மாற்றத்தை நிகழ்த்த மின்னம்பலம் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறது’’ என குறிப்பிட்டார்.

மேலும் அவர் தமிழ் மொழியின், தமிழர்களின் பெருமைகளைப் பற்றி பேசப் பேச, ஒரு விமானம் ஓடுதளப் பாதையில் ஊர்ந்து, பின் தரையிலிருந்து கிளம்பி, விண்ணில் சீறிப் பாய்வதைப் போல உணர்ந்தனர் மாணவர்கள். தன் பேச்சால் மாணவ மாணவிகளைச் சிந்திக்கத் தூண்டினார் தமிழச்சி தங்க பாண்டியன்.

அடுத்து சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர் ஓசை காளிதாசன் பேசவந்தார்.

மாறி வரும் தொழில்நுட்ப உலகில் தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான மின்னம்பலம் ஏற்படுத்திவரும் தாக்கம் பற்றி மாணவர்களிடம் எடுத்துரைத்த ஓசை காளிதாசன், இன்று உலக யானைகள் தினம் என்பதை முன்னிட்டு, யானைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை மாணவர்கள் நெஞ்சில் பதிய வைத்தார்.

மாலை 4.30 வரை நடந்த நிகழ்ச்சியில் எஸ்.வி.,எஸ். கல்லூரி மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கெடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் நாம் மாணவர்களிடம் கருத்து கேட்டபோது, “இதுவரை இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் நாங்கள் பங்கெடுத்ததில்லை. மிகவும் வித்தியாசமான, பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்தது. தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான மின்னம்பலத்தை இனி நாங்களும் எங்கள் மொபைலில் படிக்க ஆரம்பித்துவிட்டோம். இனி நாங்களும் ஸ்மார்ட் வாசகர்கள்தான்’’ என்றனர் புன்னகை மலர்ச்சியோடு.

மாணவர் சமுதாயத்தின் மத்தியில் அறிவு விதைகளைத் தூவும் ‘கேள்வி ஞானம்’ நிகழ்வின் முதல் களம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்தக் களத்தில் கலக்கிய தமிழச்சி தங்கபாண்டியன், ஓசை காளிதாசன் ஆகியோரது உரைகளின் முழு வடிவம் விரைவில் உங்கள் மின்னம்பலம் திரையில்!

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon