மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

விமர்சனம்: தரமணி!

 விமர்சனம்: தரமணி!

அந்தப் பெண் பார்க்க அழகாக இருக்கிறாள். உடையிலும், உடல் மொழியிலும் அதி நவீன அடையாளங்கள். அவனோ பார்த்ததுமே அனுதாபமோ அச்சமோ தோன்றும் விதத்தில் இருக்கிறான். இருவரும் கடும் மழையில் தனியாக மாட்டிக்கொள்கிறார்கள். அந்த இளைஞன் தன் காதல் கதையைச் சொல்கிறான். அடுத்த நாள் அந்தப் பெண் அவன் தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்று சந்திக்கிறாள். நட்பு வளர்கிறது. நெருக்கம் ஏற்படுகிறது.

இதெல்லாம் நடக்குமா என்று நீங்கள் கேட்கக் கூடாது. தரமணியில் ஏரிகளின் மீது இத்தனை கட்டிடங்கள் எப்படி வந்தன என்று நீங்கள் கேள்வி எழுப்பவில்லை அல்லவா, அப்படியானால் இதைப் பற்றியும் நீங்கள் கேட்கக் கூடாது என்கிறார் இயக்குநர் ராம்.

ராமின் மூன்றாவது படமான ‘தரமணி’ ஆண் – பெண் உறவு குறித்து வெளிப்படையாகப் பேசும் படம். தோற்றுப்போன காதலின் வலியைச் சுமந்து திரியும் இளைஞனையும் தோல்வியுற்ற திருமணத்துக்குப் பின் உறவின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் பெண்ணையும் பற்றிய கதை. உளவியல் சிக்கல்களும் ஒழுக்கம் குறித்த குழப்பங்களும் அவர்கள் வாழ்க்கையைக் கலைத்துப்போடுகின்றன. தவறான கண்ணோடு தனக்கு வலை விரிக்கும் ஆண்களைச் சமாளித்தபடி தன் குழந்தையோடு வாழும் வேண்டிய நிர்ப்பந்தம் அந்தப் பெண்ணுக்கு. வாழ்க்கையில் பிடிப்பற்று அலைந்து பல விதமான அனுபவங்களைப் பெற்ற பிறகு குற்ற உனர்ச்சியுடன் திரும்பி வரும் காதலனை அந்தப் பெண் ஏற்றுக்கொள்வாளா?

தியாவுக்கும் (ஆண்ட்ரியா) பிரபுநாத்துக்கும் (வசந்த் ரவி) இடையில் ஏற்பட்ட காதல் என்ன ஆயிற்று என்பதுதான் கதை என்று சொல்லிக் கடந்துவிட முடியாத அளவுக்குப் பல்வேறு மனிதர்களையும் உறவுச் சிக்கல்களையும் சமகால வாழ்வின் படிமங்களையும் தனக்குள் கொண்டிருக்கும் படம் ‘தரமணி’. ஒரே படத்துக்குள் பல கதைகளை வைத்திருக்கிறார் ராம்.

பல விதமான மனிதர்கள், பல விதமான வாழ்நிலைகள். காதலியால் கழட்டிவிடப்பட்ட காதலன், கணவனைப் பிரிந்த மனைவி, ஓரினச் சேர்க்கையாளர்களின் நிலை, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தங்கள் ஏக்கங்களையும் இச்சைகளையும் தணித்துக்கொள்ள விழையும் மனிதர்கள், மனைவி அல்லது காதலியை ஒழுக்கத்தை முன்வைத்துத் துன்புறுத்தும் ஆண்கள், சபலம் கொள்ளும் பெண்கள், தான் ராமன் இல்லை என்றாலும் தன் மனைவி சீதையாகத்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஆண்கள், சிகரெட் பிடிக்கும் பெண், ஹான்ஸ் பயன்படுத்தும் பீகார் ஊழியர், கண்ணாடியில் மோதிச் சாகும் புறா, சாலையோரத்தில் இறந்து கிடக்கும் நாய், புத்தகம் படிக்கும் பெண், குழந்தைக்காக வாழும் பெண், குற்ற உணர்ச்சியைத் துரத்த நினைக்கும் ஆண், அன்புக்கு ஏங்கும் சிறுவன், பேசிக்கொண்டே இருக்கும் ராம்….

இந்தச் சலனங்களினூடே சமகால வாழ்வின் முக்கியமான சில பரிமாணங்களை நமக்குக் காட்டுகிறார் ராம். உலகமயமாதல் உள்ளிட்ட பல காரணிகளால் அடியோடு மாறிவிட்ட நமது மதிப்பீடுகளும் மாற்றத்தைப் புரிந்துகொள்ளாத குழப்பங்களும் சேர்ந்து உருவாக்கும் ஊடாட்டங்களும்தான் ‘தரமணி’.

சந்தேகப்படும் ஆண்களுக்குச் சம்மட்டி அடி கொடுக்கும்படியான காட்சிகள் இந்தப் படத்தில் உள்ளன. ஆண்ட்ரியாவுக்கு ஏற்படும் அனுபவமும் காவல் துறை அதிகாரியின் மனைவியின் குமுறலும் மறக்க முடியாதவை. ஆண்களின் சின்னத்தனமான சந்தேகங்களையும் சபலங்களையும் யதார்த்தமாகக் காட்டியிருக்கிறார் ராம். பெண்களின் சபலங்களையும் சொல்லத் தவறவில்லை. ஆத்திரங்களை மட்டுமின்றி, பிறரை மன்னிக்கும் மனிதத்தன்மையையும் படம் காட்டுகிறது. கொந்தளிப்பான காட்சிகளுக்கு இணையாக, மென்மையான, ரம்யமான தருணங்களும் படத்தில் உண்டு. வாழ்வின் பல்வேறு பரிமாணங்களைப் பிரதிபலிப்பதில் இயக்குநருக்கு இருக்கும் அக்கறையை இது காட்டுகிறது. யார் மீதும் தீர்ப்பு வழங்காமல் தன் போக்கில் எல்லாரையும் காட்டிச் செல்கிறது தரமணி.

பாத்திரத்தின் சாரத்தை நன்கு உள்வாங்கி அற்புதமாக நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா. நவீன வாழ்வின் அடையாளங்கள், சுதந்திர உனர்வு, உனர்வுபூர்வமான பலவீனங்கள், சக மனிதர்களிடத்தும் விலங்குகளிடத்தும் நேசம், நேர்மை, தைரியம் ஆகிய குனங்களைச் சரியாகப் பிரதிபலிக்கிறார். அழகான தோற்றமும் அபாரமான உடல் மொழியும் நுட்பமான முக பாவனைகளும் பாத்திரத்துக்கேற்ற வசன உச்சரிப்பும் கைகொடுக்கின்றன.

ஏமாற்றம், குழப்பம், ஆத்திரம், ஆற்றாமை, குற்ற உனர்வு ஆகிய உணர்ச்சிகளை நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார் புதுமுகம் வசந்த் ரவி. அழகம் பெருமாள், காவல் துறை அதிகாரியாக வரும் ஜே.எஸ்.கே., அவருடைய மனைவியாக வரும் பெண் ஆகியோர் சிறிய வேடங்களில் வந்தாலும் மனதில் நிற்கும் நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

தேனி ஈஸ்வரின் கேமிரா தரமணியின் பல்வேறு சாயைகளை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. பாடல் காட்சிகள் நேர்த்துயாகப் படமாக்கப்பட்டுள்ளன. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தின் மதிப்பைக் கூட்டுகிறது. பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கின்றன.

இவ்வளவு வலுவான அம்சங்கள் இருந்தும் இடையிடையே ராம் கூறும் ‘கருத்துக்கள்’, பல்வேறு கதைகளைத் திணித்துத் திரைக்கதையை மூச்சுத் திணறவைக்கும் போக்கு, பல்வேறு காட்சிகள் உதிரிகளாகத் தங்கிவிடும் தன்மை ஆகியவை படத்தின் பலவீனங்கள். படத்தின் ஆதாரமான அம்சங்கள் காட்சி அனுபவமாக மாறாமல் கருத்தளவில் தாக்கம் ஏற்படுத்துவதும் முக்கியமான ஒரு குறை. ஆனால், இந்தக் குறைகளை மறக்கடிக்கும் வகையில் படம் முக்கியமான விஷயங்களைக் கவனப்படுத்துகிறது.

காலம் மாறினாலும் மாறாத ஒன்று பெண்கள் விஷயத்தில் ஆண்களின் அணுகுமுறை. ஒரு பெண் தன் காதலியாக அல்லது மனைவியாக ஆன நொடியிலிருந்து அவளுடைய செயல்களை, நடை, உடை, பாவனைகளைக் கண்காணிக்கத் தொடங்கும் ஆண் மனம் இந்தப் படத்தைப் போல வேறு எந்தப் படத்திலும் அழுத்தமாகச் சித்தரிக்கப்பட்டதில்லை. நவீன போக்குகளும் பழக்க வழக்கங்களும் கொண்ட தைரியமான பெண்ணைச் சுலபத்தில் படிந்துவிடக்கூடிய பெண்ணாக நினைக்கும் ஆண்களின் வக்கிரமும் அதற்கு அடிப்படையான அவர்களுடைய பொக்கையான ஒழுக்க மதிப்பீடுகளும் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன. நவீன வாழ்க்கை பெண்களுக்குப் புதிய சுதந்திரத்தையும் வசதிகளையும் மட்டுமின்றிப் புதிய தொல்லைகளையும் ஆபத்துகளையும் கொண்டுவந்திருப்பதையும் படம் கவனப்படுத்துகிறது. உறவுச் சிக்கல்களைப் பூழிமெழுகாமல் நேரடியாகக் கையாள்வதில் இயக்குநர் காட்டும் துணிச்சல் தமிழ் சினிமாவில் அரிதானது.

சமகாலத்தின் சலனங்களைப் பெண் நிலை சார்ந்து இவ்வளவு அழுத்தமாகப் பேசும் இந்தப் படத்தை அதற்காகவே எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon