மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

அடிப்படை தெரியாமல் பேசும் முதல்வர்!

அடிப்படை தெரியாமல் பேசும் முதல்வர்!

முரசொலி பவள விழாக் கூட்டம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முரசொலி பவள விழாப் பொதுக்கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நேற்று ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற்றபோது, ஏராளமான தொண்டர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பே மேகம் இருண்டு மழை பெய்யத் தொடங்கியதால், திறந்த வெளி மேடையில் இருந்த மு.க. ஸ்டாலின் உள்பட அனைத்துத் தலைவர்களும் நனைந்தனர். தொடர்ந்து, மழையில் நனைந்தபடியே முரசொலி பவள விழா மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதன் பின்னர், மழையில் நனைந்தபடியே, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மற்றும் சிபிஐயின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் பேசினார்கள்.

தொடர்ந்து கனமழை பெய்ததால், மழையின் காரணமாக பவள விழா பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்றும், மீண்டும் பவள விழாப் பொதுக் கூட்டம் மிகப் பெரிய அளவில் நடத்தப்படும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மழையையும் பொருட்படுத்தாமல் திரண்டிருக்கும் தொண்டர்களுக்கும் விழாவுக்கு வந்துள்ள தலைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இன்று, ஆகஸ்ட் 12ஆம் தேதி, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முரசொலி பவள விழாப் பொதுக்கூட்டம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். திமுக அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை திமுக கொண்டுவரும் என்னும் செய்தி பற்றிக் கருத்து கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஏற்கனவே கொண்டுவந்த நம்பிக்கையில்லையில்லாத் தீர்மானங்களை நாங்கள் முறியடித்தோம். மீண்டும் கொண்டுவந்தால் மீண்டும் முறியடிப்போம் என்று கூறியிருந்தார்.

இது குறித்துப் பேசிய ஸ்டாலின், சட்டசபையில் இதுவரை திமுக சார்பில், எந்த நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டு வரப்படவில்லை என்றார். இதற்கு முன்பு, திமுக சார்பில் சபாநாயகர் மீது கொண்டு வந்தது நம்பிக்கை வாக்கெடுப்பு. இதுவரை, திமுக சார்பில் அதிமுக அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படவேயில்லை. இந்த அடிப்படைகூட தெரியாமல் முதல்வர் பேசிவருகிறார். மத்திய அரசின் அனைத்து உத்தரவுகளுக்கும் அதிமுக அரசு பணிந்து போவதற்கு பாஜகவின் அழுத்தமே காரணம் என்று ஸ்டாலின் கூறினார்.

மு.க. ஸ்டாலின் வழக்கமாக 6 மாதங்களுக்கு ஒரு முறை தன் குடும்பத்தினருடன் வெளிநாடு பயணம் சென்று வருவார். கடந்த மாதம் அதேபோல் செல்வதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில் சட்டசபை கூட்டத் தொடருக்காக தனது பயணத்தை ஒத்திவைத்தார். அதைத்தொடர்ந்து, முரசொலியின் பவள விழாப் பொதுக் கூட்டம் முடிவடைந்த மறுநாள் லண்டன் செல்லச் திட்டமிட்டிருந்தார். ஆனால் நேற்று நடைபெறுவதாக இருந்த முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

அதையடுத்து, ஸ்டாலின் இன்று திட்டமிட்டபடி இரவு லண்டன் செல்வார் என்றும், அவருடன் அவரது மருமகன் சபரீஷும் செல்கிறார் என்று திமுக தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon