மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

காஷ்மீரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

காஷ்மீரில் முழு அடைப்பு:  இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35-ஏ-வுக்கு ஆதரவு தெரிவித்து பிரிவினைவாதிகள் இன்று ஆகஸ்ட் 12ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததன் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களையும் விட காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும் அரசியல் சாசன சட்டப்பிரிவு 35-ஏ-வின் கீழ் கூடுதலாக சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாடு சுதந்திரமடைந்து 7௦ ஆண்டுகளாகியும் எதற்கு இன்னும் இந்த சட்டத்தை வழங்க வேண்டும் என்று கேள்வியெழுப்பி, இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விரைவில் இதன் மீது முடிவு எடுக்கப்பட்டு, இந்தச் சட்டம் ரத்தாகிவிடுமோ என்னும் நிலை உருவாகியுள்ளது.

அதையடுத்து, சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்வதற்குக் கண்டனம் தெரிவித்து, பிரிவினைவாத இயக்கங்கள் சார்பில், இன்று ஆகஸ்ட் 12ஆம் தேதி காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கடைகள், பள்ளிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டன. சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஆகஸ்ட் 11ஆம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த பின், காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி பேசுகையில், கூட்டணி ஆட்சி அமைக்கும்போது பாஜகவிற்கு அளித்த வாக்குறுதிகளின்படி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். மேலும், மத்திய அரசு சார்பில் எந்த முக்கிய பிரமாணத்தையும் தாக்கல் செய்ய வேண்டாம் என அரசு வக்கீலிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதால், காஷ்மீர் பிரச்சினையைத் தள்ளிப் போடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது தெரியவருகிறது.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon