மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

பொதுவாக எம்மனசு தங்கம்: விமர்சனம்!

பொதுவாக எம்மனசு தங்கம்: விமர்சனம்!

கிராமத்துச் சூழலைப் பின்னணியாகக் கொண்ட காமெடிப் படங்களின் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கும் படம் 'பொதுவாக எம்மனசு தங்கம்'.

ஊரை நேசிக்கும் ஒரு இளைஞன், தனது ஊரில் உள்ள அனைவரையும் ஊரைவிட்டு வெளியேற்றச் சபதம் எடுக்கும் ஒருவரிடம் இருந்து தனது ஊரை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதைக் காமெடி கலந்து கொடுத்திருக்கிறார் தளபதி பிரபு.

தனது புகழுக்காக எதையும் செய்யும் ஊத்துக்காட்டன் (பார்த்திபன்), பக்கத்துக் கிராமமான ஊத்துப்பட்டியில் உள்ள கோவிலில், தனது மகள் லீலாவதியின் (நிவேதா பெத்துராஜ்) காதுகுத்து நிகழ்ச்சி தடைப்பட்டு அவமானப்படுகிறார். இதனால் கிராம மக்களை ஊரை விட்டு வெளியேற்றி, அந்த ஊர் சாமியைத் தனது ஊருக்குக் கொண்டுபோக எண்ணுகிறான். ஊருக்கு நல்லது செய்வது போன்று நடித்து மறைமுகமாக அவர்களைப் பழிவாங்குகிறான் ஊத்துக்காட்டன்.

அந்த ஊரைச் சேர்ந்த கணேசன் (உதயநிதி ஸ்டாலின் ) அவனது நண்பனுடன் (சூரி) இணைந்து, தங்கள் கிராமத்துக்கு முடிந்த உதவிகளைச் செய்துவருகின்றனர். பார்த்திபன் தனது கிராம மக்களைப் பழிவாங்குகிறார் என்ற உண்மை உதயநிதிக்கு தெரியவர, உதயநிதி பார்த்திபனுக்கு எதிராகக் களமிறங்குகிறார். இடையில் பார்த்திபனின் பெண்ணை (நிவேதா பெத்துராஜ்) காதலிக்கிறார். பார்த்திபனின் திட்டத்தை எப்படி முறியடித்தார், காதலியை எப்படி அடைந்தார் மகள் நிவேதா பெத்துராஜுடன் இணைந்தாரா என்பதே படத்தின் மீதிக் கதை.

கிராமத்து சாயலில் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் பொன்ராமின் உதவியாளரான தளபதி பிரபு. முதல் முறையாகப் படம் முழுவதும் கிராமத்துப் பின்னணியில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார். ஊருக்கு நல்லது செய்யும் கிராமத்து இளைஞனாக, மீசையை முறுக்கும் அவருக்கு இந்தக் கதாபாத்திரம் பொருந்தியிருக்கிறது. ஆனால் நடிப்பிலும், நடனத்திலும் இன்னும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. கிராமத்துப் பெண்ணாக நிவேதா பெத்துராஜின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.

நடிகர் பார்த்திபன் தனக்கே உண்டான நக்கலுடன் கொஞ்சம் வில்லத்தனத்தையும் சேர்த்து ரசிக்கவைக்கிறார். பார்த்திபனின் பாத்திரம் படத்திற்கு பலம். சூரி படம் முழுக்க வந்தாலும் சில இடங்களில் மட்டுமே காமெடியில் ரசிக்கவைக்கிறார்.

ஊத்துக்காட்டன் ஒரு ஊரைப் பழிவாங்குவதற்கான காரணத்தை இன்னும் சுவாரசியமாக அமைத்திருக்கலாம். டி.இமான் இசையில் இரண்டு பாடல்களைத் தவிர மற்றவை பெரிதாக ஈர்க்கவில்லை. படத்தின் கதையோட்டத்தில் பாடல்கள் ஸ்பீட் பிரேக்கராக உள்ளன. 'டாக்ஸி டே' காட்சி, பார்த்திபன் நடிப்பு, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம்.

சுவாரஸ்யமான வில்லன் பாத்திரத்தின் துணையுடன் கிராமத்துப் பின்னணியில் வந்திருக்கும் இந்தப் படம் தன் கலகலப்பால் ஓரளவு ஈர்க்கிறது.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon