மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

மனிதனுக்குப் பன்றியின் உடல் உறுப்புகளைப் பொருத்த முடியும்!

மனிதனுக்குப் பன்றியின் உடல் உறுப்புகளைப் பொருத்த முடியும்!

மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதனுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள்,விலங்கு உடல் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்துவதற்கான ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளனர். உலகம் முழுவதும் உடல் உறுப்பு தானங்களுக்காக லட்சக்கணக்கானோர் காத்துக்கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவில் மட்டுமே 1 லட்சத்து 16 ஆயிரத்து 800 பேர் காத்துக்கொண்டிருக்கின்றனர். காத்திருக்கும் பட்டியலில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருவர் சேர்கிறார்.

இப்படி உடல் உறுப்பு தானத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அமெரிக்க விஞ்ஞானிகள் பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்த முடியுமா என ஆய்வு செய்து வெற்றி அடைந்துள்ளனர். பன்றியின் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்த முடியும். ஆனால் இதன் மூலம் நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

பன்றியின் உறுப்புகளில் உள்ள மரபணுக்களில் செயல்படாமல் இருக்கும் ‘பெர்வ்’ எனப்படும் போர்சின் எண்டோஜீனஸ் ரெட்ரோ வைரஸ்கள்தான் இதற்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது. இந்த வைரஸை அகற்றும் ஆய்வில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபியல் நிபுணர்கள் ஜார்ஜ் சர்ச் மற்றும் லுகான் யங் ஆகியோர் வெற்றி அடைந்துள்ளனர். இதுவரை 37 பன்றி உறுப்புகளில் ‘பெர்வ்’ வைரஸ்கள் அகற்றப்பட்டுள்ளன.

இத்தகைய தொடர் ஆய்வுகளின் மூலம் எதிர்காலத்தில் பன்றிகளின் உடல் உறுப்புகளை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதர்களுக்குப் பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு இனத்திலிருந்து மாறுபட்ட இனத்திற்கு உறுப்புகளையோ திசுக்களையோ பொருத்துவது அல்லது மாற்று அறுவை சிகிச்சை செய்யும் முறைக்கு ஜெனோ மாற்று அறுவை சிகிச்சை எனப்படுகிறது.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon