மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

பிக்பாஸ் : உங்கள் பார்வையில் நான் 10!

பிக்பாஸ் : உங்கள் பார்வையில் நான் 10!

தீவிர பிரசாரத்தில் ரைஸா..?

மிஸ்டர் பிக்பாஸ்… இது சுத்த அழுகுணி ஆட்டம். நான் காயத்ரியிடம் மூட்டை முடிச்சுகளைக் கட்டித் தயாராக இருக்கச் சொல்லியிருந்தேன். ஆனால் நீங்கள் என்ன காரியம் செய்து வைத்திருக்கிறீர்கள்…? டாஸ்க் என்ற பெயரில் காயத்ரியை காப்பாற்றியிருக்கின்றீர்கள்.. இது நியாயமா? ஆண்டவனுக்கே இது அடுக்குமா? ரைஸா குழந்தை போல் தேம்பித் தேம்பி அழுததைப் பார்த்த பின்பும் ஏன் இந்தக் கொலைவெறி? … காயத்ரியை எவிக்ஸனிலிருந்து காப்பாற்றிவிட்டீர்கள். மக்கள் உங்கள் நிகழ்ச்சியை எவிக்ஸன் செய்துவிடப்போகிறார்கள்... எச்சரிக்கை.

காயத்ரியும் பிக்பாஸ் வீட்டைவிட்டுச் சென்றுவிட்டால் ஆட்டம் கலகலத்துவிடும் என்பதுதானே உங்கள் பயம்?. பிக்பாஸ் இல்லத்தில் காயத்ரி மட்டும் இருந்து பயனில்லை. ஜூலி மாதிரி புரட்சி வீராங்கணைகள் யாரையாவது களத்தில் இறக்கிவிடுங்கள். இல்லையென்றால் ஓவியாவின் கை கால்களைப் பிடித்தாவது நிகழ்ச்சிக்கு அழைத்து வாருங்கள். காயத்ரியை மட்டும் நம்பி நீங்கள் கடைவிரித்தால் வேலைக்கு ஆகாது. காயத்ரியால் நிகழ்ச்சியின் சுவராஸ்யம் கூடுவதில்லை. பார்வையாளர்களுக்கு எரிச்சலும், கோபமும்தான் அதிகரிக்கிறது. இந்த உணர்வில் ரசிகர்கள் நிலைத்திருக்க விரும்ப மாட்டார்கள்.

சினேகன் ஸார்…. பிக்பாஸ் குடும்பத்தினர் எவிக்ஷனிலிருந்து காப்பற்ற உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று இப்படியா மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொள்வது. பார்க்க சகிக்கவில்லை. உங்களைத் தேர்ந்தெடுப்பதும் தேர்ந்தெடுக்காததும் போட்டியாளர்களின் விருப்பம் அல்லவா..? அதை ஏன் இத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்கின்றீர்கள்..? சக்தியிடம் நீங்களும் உங்களிடம் சக்தியும் வைத்த ஒப்பாரி ரசிக்கும் விதமாக இல்லை. நான் மொல்லமாரி.. நான் முடிச்சவிக்கி… என்று கவுண்டமணியும் செந்திலும் போட்டி போட்டுக்கொண்டு தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்வது போல் சக்தியும் நீங்களும் பேசிக்கொண்டது அபத்தத்திலும் அபத்தம். வெளியே போ என்று சொல்லும் போது போனால் போகிறது. அதற்கு எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்…? இத்தனை சோகம்?

இதில் , “பத்து வருடத்திற்கு முந்தைய பழைய சினேகனைப் பார்த்துடுவீங்க” என்று பிக்பாஸிற்கு மிரட்டல் வேறு.. ?

அப்புறம் சினேகன் ஸார்… உங்களிடம் இன்னொரு பழைய பஞ்சாயத்து ஒன்று இருக்கிறது. தமிழ்தாய் வாழ்த்தை ஜூலி பாடி முடித்தவுடம், அதிகப்பிரசங்கித்தனமாக, “எழுதியவர் தாயுமானவர்” என்று ஜூலி சொன்ன போதே, “அந்த விடை மிச் சரியானது” என்ற முகபாவத்தோடு நீங்கள் அமர்ந்திருந்த போதே எனக்கு உங்கள் மீது சந்தேகம். வார இறுதியில் அதை பகடி செய்த கமல்ஹாசன், உங்களிடம் கேள்வி கேட்டு மூக்கை உடைப்பார் என்று காத்திருந்தேன். ஆனால் அவர் நாகரீகம் கருதி உங்கள் பக்கம் திரும்பவில்லை. ஆனால் வசமாக வந்து பிக்பாஸிடம் சிக்கினீர்கள் பாருங்கள். ஒரே வேடிக்கைதான் போங்கள். பிஸ்பாஸைச் சொல்லிக் குறையில்லை. பிக்பாஸ் டாஸ்க்குளை உருவாக்குவது குறும்புக்கார இளைஞர்கள் குழுதான். கூடிப் பேசி, உங்களுக்கு நேற்று ஆப்பு வைத்துவிட்டார்கள். நீங்கள் நிச்சயம் சிக்குவீர்கள் என்று திட்டமிட்டே உங்களை நோக்கி அந்தக் கேள்வியை வீசியிருக்கிறார்கள்.

இதைப் பற்றி இத்தனை எழுத வேண்டுமா? தவறுதல் மனித இயற்கை அன்றோ? என்று சிலர் வருத்தப்படலாம். சினேகன் ஸார் நீங்கள் ஒரு கவிஞர். இது மிக மிக அடிப்படையான கேள்வி அல்லவா..?- இது எப்படி உங்களுக்குத் தெரியாமல் போனது...? உங்கள் பாடல்கள் பிரபலமான போது இந்தப் பாடலை எழுதியது என் மாணவன்தான் என்று மார்தட்டிக்கொண்ட உங்கள் தமிழ் ஆசிரியர் நேற்று நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்திருந்தால் தலைகுனிந்திருப்பார். ரைஸா இவரையா நீங்கள் புத்திசாலி என்று நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்..? எல்லோருக்கும் எல்லாம் தெரியாதுதான். நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் தான் சார்ந்த துறையில் மிக மிக அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பதுதானே தொழில் தர்மம்?

ரைஸா …. நான் எழுதுவது உங்களுக்கு வந்து சேராது. ஆனால் உள்ளுணர்வின் வழியாக நான் கூறுவது உங்களுக்கு வந்து சேரும் என்று நம்புகின்றேன். உங்களை ஜல்லிக்கட்டு காளை என்று நான் இங்கே புகழ்ந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னடாவென்றால் பூனைக்குட்டி மாதிரி பதுங்கி அழுது கொண்டிருக்கிறீர்கள்.. இது முறையா…? நீங்கள் பதுங்குவதை அறிந்தால் காயத்ரி மேலே விழுந்து பிறாண்டி விடுவார். எச்சரிக்கை. உள்ளுக்குள் அழுதாலும் வெளியில் புலி போல் உறுமிக்கொண்டிருங்கள்.. அதுதான் உங்களுக்குப் பாதுகாப்பு.. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மைதான். சக்தியும், காயத்ரியும் இணைந்து வாழும் வீட்டில் மனசாட்சியுள்ளவர்கள் வாழ முடியாது. அதுவும் உங்களைப் போல் உண்மையைப் புரிந்துகொண்டு தன்மானத்தோடு வாழ நினைப்பவர்கள் வாழவே முடியாது. கவலைப்பட வேண்டாம். காயத்ரி வெளியேறாவிட்டால் என்ன? சக்தி வீட்டைவிட்டு வெளியேறப் பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன. என்ன..? ஆரவ் மீது ஓவியா ஆர்மியினர் கடும் கோபத்தில் இருப்பார்கள். இல்லையென்றால் சக்தி வெளியேறுவதை உறுதியாகச் சொல்லிவிட முடியும். சக்தி இந்த வாரம் வெளியேறாவிட்டால் என்ன? அடுத்த வாரம் காயத்ரியை நாமிடேட் செய்ய நீங்கள் இப்போதிருந்தே தொடர் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே உங்கள் வசம் சினேகன் இருக்கிறார். ஆனால் அவரை நம்ப முடியாது. ஆரவ்விடம் பேசி நியாயத்தைப் புரிய வையுங்கள். வையாபுரியிடம் பேசுங்கள். பிந்துவிற்கு பிக்பாஸ் வீட்டின் முன் கதை நன்றாகவே தெரியும். முதன் முதலில் காயத்ரியை நாமினேட் செய்தது அவர்தான். நடக்கும் யாவற்றையும் அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆகவே காயத்ரியை நாமினேட் மட்டும் செய்ய ஏற்பாடு செய்யுங்கள். அவரைத் தூக்கி வெளியே வீசும் காரியத்தை பிக்பாஸ் பார்வையாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். இதே ஃபார்முலா சக்திக்கும் பொருந்தும். ரைஸா நீங்கள் நேரடியாக பார்வையாளர்களிடம் ‘சக்திக்கு தயவுசெய்து ஓட்டுப்போடாதீங்க… காயத்ரியும் சக்தியும் ஒண்ணா இருந்தா என்னால இந்த வீட்ல இருக்க முடியாது” என்று நேரடி பிரசாரம் செய்தது மிகச் சிறந்த யுக்தி. இந்த யுக்தி நிச்சயம் உங்களுக்கு கை மேல் பலனைக் கொடுக்கும். கவலை வேண்டாம் ரைஸா. சக்தி, காயத்ரி இருவரில் ஒருவரைப் பிரித்துவிட்டால் பிரச்சனை ஓய்ந்துவிடும் என்று நினைக்காதீர்கள். காயத்திரியால் இன்னொரு சக்தியை உருவாக்கிவிட முடியும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

டாஸ்க் என்ற பெயரில் இரண்டு காமெடியன்களை உள்ளே அனுப்பியிருந்தார் பிக்பாஸ் . நல்ல யோசனைதான். ஆனால் பார்க்க படு மொக்கையாக இருந்தது. பிக்பாஸ் இல்லத்திற்குள் பெரும் கலகத்தை எழுப்ப மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது அந்த டாஸ்க். சரியான வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார் பிக்பாஸ். டாஸ்க் டீம் இன்னும் கொஞ்சம் பலமாக யோசனை செய்திருக்கலாம். ஒன்றுமில்லை விஷயம் ரொம்ப சிம்பிள்…

பிக்பாஸ் வீட்டில் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் புறம்பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை அப்படியே போட்டுக்கொடுக்கும் வேலையை வெளியாட்கள் எளிமையாகச் செய்திருக்கலாம். புரியவில்லையா? ரைஸா காயத்ரியைப் பற்றி பேசியதை காயத்ரியடம் போட்டுக் கொடுத்தால் என்ன நடக்கும்.? யோசித்துப்பாருங்கள் பயமாக இல்லை..?

அதே போல் இன்னொரு காரியத்தை வெளியாட்கள் செய்து பெரும் கலகத்தை விளைவித்திருக்கலாம். பிக்பாஸ் வீட்டில் யாரை எப்படி எரிச்சலூட்டலாம் என்பது இப்போது நாம் அனைவருக்குமே அத்துபடி.. காயத்ரியிடம் சென்று, “ஹேர்னா என்ன மீனிங் மேடம்?” என்று கேட்டால் என்ன நடக்கும்..? அதே போல், ஆரவ்விடம் சென்று, “ஓவியாவிற்கு மருத்துவ முத்தம் கொடுத்தீர்களே.. ? ஏன் அவருக்கு குணமாகவில்லை” என்று கேட்டால் மனிதர் பட்டாசாக வெடித்திருப்பார். சினேகனிடம் சென்று, “கம்பராமாயணத்தை எழுதியது யார்?” என்று கேட்டிருக்கலாம். இப்படியான கேள்விகள் தொடர்ந்து வருமோ என்ற அச்சத்தில் சினேகன் சுரங்கப் பாதை தோண்டி வெளியே வரும் ஃபுட்டேஜ்கள் உங்களுக்கு கிடைத்தாலும் கிடைக்கும். இப்படி ஐடியா நம் வசம் நிறைய இருக்கிறது. நம்ம கிட்ட கேளுங்க பாஸ். (நானும் பல ப்ராஜக்ட்ல விஜய் டிவிக்காக வேலை பார்த்தவன்தானே..)

மிஸ்டர் கமல்ஹாசன். இன்று நீங்கள் விசாரணை செய்ய பெரிதாக எதுவும் இல்லை. ஆனால் காயத்ரி உங்கள் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். அதை மறந்துவிடாதீர்கள். பெருந்தன்மையாக மன்னித்தீர்கள் என்றால் பிக்பாஸ் மிகவும் பாதிக்கப்படுவார். ஆகையால் காயத்ரியின் விஷயத்தை கொஞ்சம் கவனத்தில் எடுங்கள். இல்லையேல் பார்வையாளர்களும் பிக்பாஸும் ஏமாந்துவிடுவார்கள். பிக்பாஸிற்கு கூழும் வேண்டும். மீசையும் வேண்டும். அதாவது காயத்ரி மீது நடவடிக்கையும் வேண்டும். காயத்ரியும் வேண்டும். பார்க்கலாம் கமல்ஹாசனின் நீதிவிசாரணையை…

வேட்டை பெருமாள்

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon