மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

டெஸ்ட் கிரிக்கெட் முதல் நாள்: தொடக்கமும் முடிவும்!

டெஸ்ட் கிரிக்கெட் முதல் நாள்: தொடக்கமும் முடிவும்!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றிபெற்ற இந்திய அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.

இன்று (ஆகஸ்டு 12) காலை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தயங்காமல் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். ஷிகர் தவன், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இருவரும் உணவு இடைவேளை வரை ஆட்டமிழக்காமல் 134 ரன்களைக் குவித்தனர். இந்திய அணி 188 ரன்களைச் சேர்த்திருந்தபோது ராகுல் தனது விக்கெட்டினைப் பறிகொடுத்துச் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். 85 ரன்கள் எடுத்த நிலையில் புதிய பந்துவீச்சாளர் புஷ்பகுமராவின் பந்தில் ஆட்டமிழந்தார். விரைவில் சதம் அடித்த தவனும் 119 ரன்னில் புஷ்பகுமராவிடம் வீழ்ந்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய சத்தீஸ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் குறைந்த ரன்களில் வெளியேறினர். நிதானமாக விளையாடிய அணியின் கேப்டன் கோலி அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 42 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அஸ்வினும் 31 ரன்களில் பெர்னாண்டோ பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்திய அணியின் தொடக்க சிறப்பாக இருந்தாலும் பின்னர் வந்த வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 329 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. விருத்திமான் சாஹா, ஹர்திக் பாண்டியா இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

கடந்த இரண்டு போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் 600க்கு மேல் ரன் குவித்துப் பதற்றமில்லாமல் வெற்றிபெற்ற இந்திய அணி இந்த முறை அந்த அளவுக்கு ரன் குவிப்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon