மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

தினகரனின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பா? செல்லூர் ராஜு பதில்!

தினகரனின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பா? செல்லூர் ராஜு பதில்!

வரும் 14ஆம் தேதி மதுரை மேலூரில் தினகரன் நடத்தும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பிதழ் வந்துள்ளது. கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பேன் என்று, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நீலகிரி வந்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜு, கோவை விமான நிலையத்தில் இன்று (ஆகஸ்ட்-12) செய்தியாளர்களைச் சந்தித்தபோது தினகரன் நடத்தும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்குச் செல்வது குறித்துப் பேசினார்.

“எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவுக்கு ஏற்பட்ட சூழல், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் ஏற்பட்டுள்ளது. பல தடைகளை தாண்டி, இரு அணியினரும் விரைவில் இணைந்து சிறப்பாக செயல்படுவோம். தினகரன் நடத்தவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பேன். தினகரன் மட்டுமல்லாமல் யார் எங்களைக் குறை கூறினாலும், அதை முறியடித்து சிறப்பாக செயல்படுவோம். இரட்டை இலை சின்னத்துடன் விரைவில் மக்களை சந்திப்போம்” என்றவர், அதிமுக பிளவுபட்டிருந்தாலும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் வேறு கட்சிக்குச் செல்லவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

“அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளையாக ஸ்டாலின் செயல்படுகிறார். தினமும் பத்திரிகைகளில் இடம்பெறுவதற்காக அவரது தந்தை போல அரசின் மீது குறைகளை கூறிக்கொண்டிருக்கிறார். அதிமுக தொண்டர்களை யாரும் குழப்ப முடியாது, ஒன்றுபட்ட அதிமுகவாக விரைவில் இணைந்து செயல்படுவோம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

“கடந்த வாரம் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும், கூட்டுறவு வங்கிகளின் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. வருமான வரி கட்டும் அளவுக்குத் தமிழகக் கூட்டுறவுச் சங்கங்கள் சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளன” என்று கூறீயவர், திமுகவின் ஆட்சிக் காலத்தில் கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்படவில்லை, கடனில் இயங்கியது என்றும் அவர் சொன்னார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon