மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

இரோம் ஷர்மிளாவின் திருமணத்திற்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி!

இரோம் ஷர்மிளாவின் திருமணத்திற்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி!

இரோம் ஷர்மிளாவின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்‍கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்‍களும் நிராகரிக்‍கப்பட்டுள்ளன.

இரோம் ஷர்மிளாவின் திருமணம் வரும் 16 ஆம் தேதி கொடைக்கானலில் நடைபெறவுள்ளது. கடந்த 9ஆம் தேதி இடது பக்கம் என்ற அமைப்பின் சார்பாக நடைபெற்ற மனித உரிமை தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற இரோம் ஷர்மிளா திருமணம் என்பது எனது தனிப்பட்ட விவகாரம் இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? என்பது எனக்குத் தெரியவில்லை. என்னுடைய திருமணத்திற்கான மூன்று சாட்சிகள் மிரட்டப்பட்டுள்ளனர். என் திருமணம் கொடைக்கானலில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடைபெறும். கொடைக்கானலிலேயே தங்கி தொடர்ந்து மனித உரிமைக்காகப் போராடுவேன்’ எனத் தெரிவித்தார்.

மணிப்பூர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொடைக்கானலுக்கு ஓய்வு எடுக்கச் சென்றார். அதைத் தொடர்ந்து, தான் காதலித்த டெஸ்மேண்ட் கவுடின்கோவை மணக்க உள்ளதாக அறிவித்தார். திருமணத்துக்குப் பிறகு கொடைக்கானலில் தங்கி அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக போராடப் போவதாக தெரிவித்தார். திருமணம் செய்வதற்காக கடந்த ஜூலை 12ஆம் தேதி சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்ப மனு அளித்தார். இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்தால் 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என சார் பதிவாளர் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இரோம் சர்மிளா திருமணம் இங்கு நடைபெற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும். இவர்கள் திருமணத்துக்கு அனுமதிக்கக் கூடாது என்று கொடைக்கானல் பேத்துப்பாறையைச் சேர்ந்த மகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்து சார்பதிவாளர் ராஜேசிடம் மனு அளித்தார். கடந்த வாரம் இந்து மக்கள் கட்சி இரோம் ஷர்மிளா வெளியேற வேண்டும் என வலியுறுத்தியது. மேலும், பலர் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், திருமணத்துக்காகப் பதிவு செய்யும் நபர் உரிய வயதினை அடைந்திருந்தால் போதும் என்ற சிறப்பு திருமண சட்ட விதியின்படி எதிர்ப்பு மனுக்கள் அனைத்தையும் சார்பதிவாளர் அலுவலகம் நிராகரித்துள்ளது.

இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவாகக் கொடைக்கானல் கோடைமலை அம்பேத்கார் அமைப்புசாரா மற்றும் கட்டுமான சங்கம் மற்றும் கீழ்மலை பளியன் புலையன் கூட்டமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon