மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

விதார்த்தின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

விதார்த்தின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீசான விஐபி 2, தரமணி, பொதுவாக எம்மனசு தங்கம் ஆகிய படங்களுடன் `குரங்கு பொம்மை' படமும் வெளியாக இருந்தது. ஆனால் அதிகப்படியான தியேட்டர்கள் கிடைக்காததன் காரணமோ என்னவோ இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் உள்ளது. இயக்குநர் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ என்ற குறும்படத்தின் மூலம் கவனத்தை பெற்ற நித்திலன் இயக்கியுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் முதல் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை உண்டு பண்ணிய வேளையில் இப்படத்தின் இரண்டாம் டிரெய்லர் இன்று (ஆகஸ்ட் 12) வெளியாகியுள்ளது.

அறிமுக இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோகநாத் இசையமைப்பில் நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளார். ‘ஸ்ரேயாஸ்ரீ மூவிஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் இதற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். "மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக்கொண்டே இருக்கும். அதன் குறியீடாக வைத்து ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கியிருக்கிறேன். அப்பா, மகனுக்கும் இடையேயான ஒரு பாசத்தை அழுத்தமாகச் சொல்லியிருப்பதோடு, ஒரு நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பைக் கதைக்கருவாக வைத்து படம் இயக்கியுள்ளேன்" எனப் படம் குறித்து இயக்குநர் நித்திலன் முன்பு தெரிவித்திருந்தார். இந்த படத்துக்கு தணிக்கை குழு `U' சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதன் முதல் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை உண்டு பண்ண, இரண்டாம் டிரெய்லரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நான் யாரு.. ஏன் இங்க நிக்கிறேன்...என்ற கேள்விகளுக்கு மத்தியில் ஐம்பொன் சிலை உள்ளிருக்கும் குரங்கு படம் வரைந்த பேக்கை சுமந்து கொண்டு அப்புராணியாய் நிற்கும் பாரதி ராஜா `பாண்டிய நாடு' படத்திற்குப் பிறகு மிகையில்லா நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். `ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படம் பெரிதளவில் வெற்றி பெறாததால் இப்படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கிறார் விதார்த். கதையை விட படத்தின் மேக்கிங் கவனத்தை பெற்றுள்ள நிலையில்,விரைவில் வெளிவரவிருக்கும் இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா பொறுத்திருந்து பார்ப்போம்.

குரங்கு பொம்மை டிரெய்லர் 2

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon