மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

கென்யா அதிபர் தேர்தல்!

கென்யா அதிபர் தேர்தல்!

கென்யாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் உகுரு கென்யட்டா 54.3 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதையடுத்து, கென்யட்டா மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்கிறார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உகுரு கென்யட்டா அதிபராகப் பதவி வகித்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அங்கு கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 8 பேர் போட்டியிட்டபோதும், முன்னாள் அதிபர் உகுரு கென்யாட்டா (55) மற்றும் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்கா(72) ஆகியோரிடையே மட்டுமே நேரடி போட்டி ஏற்பட்டது. அதையடுத்து நடந்த வாக்குப்பதிவில் அதிபர் கென்யட்டாவுக்கு, 54.3 சதவீதம் வாக்குகளும், ஒடிங்காவுக்கு 44.7 சதவீதம் வாக்குகளும் கிடைத்தன.

தேர்தலின்போது, தேர்தல் ஆணைய கம்ப்யூட்டர்கள் மற்றும் அதில் உள்ள தரவுகளை ஹேக்கர்கள் முடக்கி விட்டதாகவும், இதில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது என்றும் எதிர்க்கட்சி தலைவர் ரைலா ஒடிங்கா குற்றம் சாட்டினார். அதன் காரணமாக, ஒடிங்காவின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து கென்யா தலைநகர் நைரோபி, கிசுமு, கிபேரா உள்ளிட்ட பல நகரங்களில் கலவரம் மூண்டது. தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. இதில், சில பகுதிகளில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுவன் உள்பட 3 பேர் இறந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கலவரத்தை அடக்கும் பணியில் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டனர். நாட்டு மக்கள் அமைதி காக்கும்படி அதிபர் கென்யட்டா வேண்டுகோள் விடுத்தார். எதிர்க்கட்சி தலைவர் ஒடிங்காவும் அமைதி காக்கும்படி வலியுறுத்தினார். அதையடுத்து கலவரம் கட்டுக்குள் வந்தது. அதன் பின்னர், வாக்கு எண்ணிக்கை நடந்தபோது, வாக்கு எண்ணிக்கை துவக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்த அதிபர் கென்யாட்டா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றார். அதிபர் தேர்தலில் கென்யட்டா வெற்றி பெற்றதாக தேர்தல் கமி‌ஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் கென்யட்டா மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்கிறார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon