மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

அயல்வாழ் தமிழரின் மனிதாபிமானம்!

அயல்வாழ் தமிழரின் மனிதாபிமானம்!

டொரன்டோவில் உள்ள வால்மார்ட்டில் ஆடை திருடிய இளைஞரை மனிதாபிமானத்துடன் காப்பாற்றியது மட்டுமல்லாமல், அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்த தமிழ் போலீஸ்காரருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் டொரன்டோ நகரில் உள்ள வால்மார்ட்டில் 18 வயது இளைஞர் ஒருவர் ஜவுளிக் கடையில் ஆடை திருடினார். அந்த இளைஞரைக் கடை நிர்வாகம் பிடித்துவைத்துக் கொண்டு போலீஸில் புகார் கொடுத்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ்காரர்களில் ஒருவர் நிரன் ஜெயநேசன். இவர், தமிழகத்தைச் சேர்ந்தவர்.

இந்தக் கடையில் விலை உயர்ந்த பொருட்கள் இத்தனை இருந்தும், ஏன் அந்த இளைஞர் ஒரு சட்டை, சாக்ஸ், டை ஆகியவற்றை மட்டும் திருடியுள்ளார் என ஒரு நிமிடம் யோசனை செய்தார். பின்பு, இளைஞனைத் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தார். அந்த இளைஞர், எனக்கு நேர்முகத்தேர்வு இருந்தது. அதில், நான் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல ஆடை அணிந்து செல்ல வேண்டும். ஆனால், நல்ல ஆடை வாங்குவதற்கு என்னிடம் பணம் இல்லை. அதனால், ஆடையைத் திருடிவிட்டேன் என தெரிவித்துள்ளார். அதை கேட்டு மனம் இரங்கிய ஜெயநேசன் இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யாமல், அவருக்குத் தேவையான சட்டை, சாக்ஸ், டை ஆகியவற்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.

“இந்த இளைஞன் வாழ்க்கையில் அதிகமான கஷ்டத்தை எதிர்கொண்டுவருகிறார். தன்னுடைய வேலை மூலம் குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார். அதனால், இளைஞர் தவறு செய்துவிட்டார். அவரைக் கைது செய்யவில்லை. ஒருவேளை அவரைக் கைது செய்தால், அவரது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். தற்போது, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று வேலைக் கிடைத்துவிட்டால் அவரது வாழ்க்கை முற்றிலும் மாறும்” என ஜெயநேசன் கூறியுள்ளார்.

வாழ்க்கையின் சக்கரத்தில் ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் மாறுபாடான முறையில் நடந்துகொள்கிறோம். ஒருசிலர் , அதிலிருந்து மீண்டு வந்துவிடுகின்றனர். ஒரு சிலர் அதையே பிடித்துக்கொண்டு பயணிக்க ஆரம்பிக்கின்றனர். உரிய உதவியும் ஆதரவும் கிடைத்தால் இதிலிருந்து தப்பலாம். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் மற்றவர் இடத்தில் இருந்து யோசிக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon