மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

தூக்கம் பறித்த பேஸ்புக் சராஹா!

தூக்கம் பறித்த பேஸ்புக் சராஹா!

பேஸ்புக்கில் ஒவ்வொரு முறை புதிய புதிய அப்ளிகேஷன்அறிமுகமாகும்போதெல்லாம் அது டிரென்ட் ஆவது வழக்கம். அதன்படி கடந்தஜூன் மாதம் வெளியான சராஹா என்னும் அப்ளிகேஷன் தற்போது சமூகவலைதளங்களில் காட்டுத் தீபோலப் பரவி வருகிறது. சவுதி அரேபியா, எகிப்துபோன்ற நாடுகளில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த புதிய அப்ளிகேஷன், தற்போது இந்தியாவிலும் டிரென்ட் ஆகியுள்ளது.

பொதுவாக நண்பர்கள் என்றாலும் அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்ட மனதில்தயக்கம் எழுவது அனைவருக்கும் நிகழும். அதை எவ்வாறு அவர்களிடம்தெரிவிப்பது என்ற தயக்கம் இருக்கும். தனது சொந்தக் கருத்துக்களைவெளிப்படையாகத் தெரிவிக்கும் விருப்பமும் சிலருக்கு இருக்காது. இதைப் போன்றவர்களுக்காக உருவாக்கப்பட்டிருப்பதுதான் சராஹா அப்ளிகேஷன். இதன் மூலம் யார் என்று குறிப்பிடாமல் நண்பர்களுக்கும், பிறருக்கும் நமதுகருத்துக்களைத் தெரிவிக்க முடிகிறது.

சராஹா தற்போது பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சராஹா இணையப் பக்கத்துக்குச் சென்று அதில் லாக்-இன் செய்தால் ஒரு இணைப்பு கிடைக்கும். அந்த இணைப்பை பேஸ்புக்கில் நமது பக்கத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதில் நமது நண்பர்கள் நம்மைப் பற்றிய தங்களது கருத்துக்களை அனுப்புவதற்கான வசதி இருக்கிறது. அனுப்புபவர் யார் என்று தெரியாததுதான் இந்த வசதியின் சிறப்பு.

தன்னைப் பற்றி என்ன கருத்து வந்திருக்கிறது என்பது குறித்த ஆர்வம் ஒருபுறம், அதை யார் அனுப்பியிருப்பார் என்பதைக் கண்டுபிடிக்கும் ஆவல் ஒருபுறம் என்று பேஸ்புக் பயனர்களுக்கு இந்த ஆட்டம் மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. சிலர் அந்தச் செய்திகளைப் பகிர்ந்துகொண்டு அவற்றுக்குப் பதிலும் சொல்கிறார்கள்.

ஆன்ட்ராய்டு, IOS இரண்டிலும் வெளியாகியுள்ள இந்த அப்ளிகேஷனில், வரும்செய்திகளுக்கு மீண்டும் நம்மால் செய்திகளை அனுப்ப முடியாது. ஆனால் அந்தவசதியை விரைவில் அறிமுகம் செய்யவிருப்பதாக சராஹா வலைதளப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய அப்ளிகேஷன் இன்னும் எவ்வளவு நாட்களுக்குப் பரபரப்பாக வலம்வரும் என்பது கணிக்கமுடியாத ஒன்றாக இருந்தாலும் இப்போதைக்கு இதுதான் பலருக்கு முக்கியமான வேலை என்பது என்னமோ உண்மை.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon