மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

சென்னையில் தீ பிடித்து எரிந்த ஆம்னி பஸ்!

சென்னையில் தீ பிடித்து எரிந்த ஆம்னி பஸ்!

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்த ஆம்னி பேருந்து தீ பிடித்தது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சனிக்கிழமை முதல் வரும் செவ்வாய் கிழமை வரை தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் பெரும்பாலான மக்கள் சென்னையில் இருந்து வெளியூருக்கும், வெளியூரில் இருந்து சென்னைக்கும் படையெடுத்துள்ளனர். இதில் அதிக கட்டணம் வசூலித்தாலும் தங்களது வசதிக்காகப் பயணிகள் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க விரும்புகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஆகஸ்ட்-11 ஆம் தேதி இரவு பெங்களூருவில் இருந்து 42 பயணிகளுடன் புறப்பட்ட ஆம்னி பேருந்து இன்றுஆகஸ்ட்-12 ஆம் தேதி காலை சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. காலை 8.30 மணியளவில் பேருந்து திருமழிசை சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது பேருந்தின் பின்பக்கத்தில் இருந்து புகை வெளியே வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் புகை வெளியாவது குறித்து பேருந்தின் ஓட்டுநர் ஸ்ரீதாராவிடம் தெரிவித்தனர். அப்போது ஸ்ரீதாரா பயணிகளை உடனடியாக உடைமைகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்குமாறு கூறியுள்ளார். பயணிகள் கீழே இறங்கிக் கொண்டிருந்த நிலையில் பேருந்து தீ பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இந்த தீ சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் மளமளவென பரவத் தொடங்கியது.

இதுகுறித்து தகவலறிந்த மதுரவாயல், அம்பத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் 50 மீட்டர் தொலைவிற்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை எனவே அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து சிக்னலில் நின்று கொண்டிருந்ததால் தங்களால் விரைவாகக் கீழே இறங்க முடிந்தது, இதுவே ஓடிக்கொண்டிருக்கும் போது தீ பிடித்திருந்தால் எங்களின் நிலை என்னவாகியிருக்கும் என்று பயணிகள் வருத்தம் தெரிவித்தனர்.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் பேருந்து குளிர்சாதன வசதி உடையப் பேருந்து என்பதால் பேருந்தின் குளிர்சாதனத்தின் சுழலும் விசிறியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon