மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

கும்பகோணம் தீர்ப்பு: அரசு அப்பீல் செய்ய கோரிக்கை!

கும்பகோணம் தீர்ப்பு: அரசு அப்பீல் செய்ய கோரிக்கை!

கும்பகோணம் பள்ளிக்கூடத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு நிகழ்ந்த தீ விபத்தில் வகுப்பறைகளை விட்டு வெளியில் கூட வரமுடியாத நிலையில் 94 குழந்தைகள் கருகி இறந்த கொடுமையை யாரும் மறந்திருக்க முடியாது.

இவ்விபத்துக்குக் காரணமான பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும், சமையலர் சரஸ்வதிக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையையும், அவர்கள் இதுவரை சிறையில் இருந்த காலத்திற்கான தண்டனையாக குறைத்தும், இவ்வழக்கில் தண்டிக்கப்பட்ட மேலும் 7 பேரை முற்றிலுமாக விடுவித்தும் மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் 16.7.2004 அன்று சமையல் அறை கூரைமேல் தீப் பற்றி மளமளவென வகுப்பறைகளுக்கும் பரவியதில் 94 குழந்தைகள் பரிதாபமாக எரிந்து கரிக்கட்டைகளாகினர். 18 குழந்தைகள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிறுவனர் பழனிச்சாமி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியைகள் உள்ளிட்ட 24 பேர் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

சுமார் பத்து வருடங்கள் நீடித்த இந்த வழக்கில்... 2014 ஜூலை 30-ம் தேதி தஞ்சை நீதிமன்றம் பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், தாளாளர் சரஸ்வதி, சமையலர் வசந்தி உள்ளிட்ட 10 பேருக்கு சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தது. 11 பேர் விடுவிக்கப்பட்டனர்.

11 பேரை விடுவித்ததை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதேபோல் தண்டனையை ரத்து செய்யக்கோரி சிறையில் உள்ளவர்கள் மனு தாக்கல் செய்தனர். இதற்கிடையே சிறைத்தண்டனை பெற்ற தாளாளர் சரஸ்வதி உடல்நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

மேல்முறையீட்டு வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்டு 10 ஆம் தேதி வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்ட 9 பேரை விடுவித்தும், சமையலர் சரஸ்வதியின் தண்டனையை உறுதி செய்தும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதன் மூலம், 94 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான கும்பகோணம் தனியார் பள்ளிக்கூட தீ விபத்தில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேரை விடுதலை செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு அப்பீல் செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நேற்று ஆகஸ்டு 11 ஆம் தேதி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

’’நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கும்பகோணம் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்த சென்ன உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சம்பத் தலைமையிலான ஆணையம்,‘எந்த விதிகளையும் கடைபிடிக்காமல், அடிப்படை வசதிகள் கூட இல்லாத பள்ளியில் 900 மாணவர்களைச் சேர்த்து படிப்பதற்கு அனுமதி அளித்தது குற்றம். கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்துக்கு முழுக்க முழுக்க அரசு அதிகாரிகள் தான் பொறுப்பு’ என்று கூறியிருந்தது. அந்த ஆணையத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட 5 அதிகாரிகளும் இப்போது விடுதலை செய்யப்பட்டவர்களில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாத்திரம் அறியாமல் பிச்சைப் போடுவதைப் போல கருணையே காட்டக் கூடாத கொடிய குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் கருணை காட்டியிருப்பது சிறிதும் நியாயமல்ல.

கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து வழக்கில் சம்பந்தப்பட்டோரை காப்பாற்றுவதற்காக தொடக்கம் முதலே முயற்சிகள் நடைபெற்று வந்தன. இவ்வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்டிருந்த தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சி.பழனிச்சாமி, வட்டாட்சியர் பரமசிவம் ஆகியோர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டனர். அதன்பின் இவ்வழக்கில் கடந்த 2014ல் கீழமை நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் ஆசிரியர்கள், அதிகாரிகள் என மேலும் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

மீதமுள்ளவர்களும் இப்போது விடுதலை செய்யப்பட்டுவிட்ட நிலையில், ஆசை ஆசையாய் வளர்த்த குழந்தைகளை தீக்கு பறிகொடுத்து விட்டு தவிக்கும் பெற்றோர்களுக்கு எங்கிருந்து நீதி கிடைக்கும்.

94 குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்குகளில் இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஆனால், குற்றமிழைத்தவர்களுக்கு எளிதாக விடுதலை கிடைத்து விடுகிறது. இது என்ன நியாயம்?

கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். எனவே, இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் டாக்டர் அன்புமணி.

இந்தத் தீர்ப்பைக் கேட்டு குமுறி வெடித்துக் கொண்டிருக்கிறார்கள் பரிதாபமாக இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon