மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

இளமை ஆற்றல்: உங்களுக்குப் பிரதமராக ஆசையா?

இளமை ஆற்றல்: உங்களுக்குப் பிரதமராக ஆசையா?

உயர்நிலைப் பள்ளி ஒன்றின் மாணவர்களிடம் கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. பிற்காலத்தில் நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்கள் என்னும் வழக்கமான கேள்வியைக் கேட்டேன்.

டாக்டர், இஞ்சினியர், ஆசிரியர், காவல் துறை அதிகாரி, ராணுவ வீரர், விஞ்ஞானி, விளையாட்டு வீரர் எனப் பல பதில்கள் வந்தன.

நாட்டில் இன்று உங்கள் மனதை மிகவும் பாதிக்கும் விஷயம் என்ன என்று அடுத்த கேள்வியைக் கேட்டேன்.

ஊழல், சுயநலம், அலட்சியம், பெண்களுக்கு எதிரான வன்முறை, பெண்களை ஒடுக்கும் போக்கு, போக்குவரத்துச் சீர்கேடு, நிர்வாகச் சீர்கேடு, சாதி, மத மோதல்கள், கல்வியின் நிலை, மருத்துவத்தின் நிலை, ஏழ்மை, ஏற்றத்தாழ்வுகள் என்று பல பதில்களை மாணவர்கள் உணர்ச்சி பொங்கக் கூறினார்கள்.

உங்கள் மனதை இந்த அளவுக்குப் பாதிக்கும் விஷயம் எல்லாம் இப்படி இருக்கின்றன. ஆனால், நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்கள் என்பதற்கும் இதற்கும் தொடர்பே இல்லையே என்றேன்.

மாணவர்கள் மத்தியில் பலத்த மவுனம்.

உங்கள் மனதை வாட்டும் பிரச்சினைகளுக்கும் உங்கள் வாழ்க்கை லட்சியத்துக்கும் அவ்வளவாகத் தொடர்பில்லை என்றால் இதைப் பற்றியெல்லாம் உங்களுக்குக் கவலை இருக்கிறது என்பதற்கு என்ன அடையாளம் என்றூ கேட்டேன்.

இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டால் போதுமா, இதற்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்க வேண்டாமா என்று அந்தக் கேள்வியை நீட்டித்துக்கொண்டு போனேன்.

மாணவர்களில் சிலர் சுதாரித்துக்கொண்டார்கள். தமது எதிர்கால வாழ்வில், தொழில் அல்லது பணியின் மூலம் தன்னால் செய்யக்கூடிய சமூகப் பணிகள் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.

பள்ளிப் பருவத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, கல்லூரியில் படிப்பவர்களுக்கும் இந்தக் கேள்விகள் பொருந்தும். உங்களைப் பாதிக்கும் விஷயங்கள் பல இருக்கத்தான் செய்கின்றன. உங்களுக்கென்று சமூக அக்கறை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், எதிர்கால வாழ்க்கை குறித்த உங்கள் திட்டங்களில் இந்தக் கவலைகளுக்கான இடம் ஏதாவது இருக்கிறதா?

இந்தக் கேள்வியை உங்கள் மனதுக்குள் நீங்கள் எழுப்பிக்கொள்ளுங்கள். அதற்கான பதிலை எனக்கோ பிறருக்கோ சொல்ல வேண்டாம். உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள்.

நீங்கள் எந்தத் துறையில் வேண்டுமானாலும் இருங்கள். எந்தத் தொழிலை, எந்தப் பணியை வேண்டுமானாலும் செய்யுங்கள். உங்கள் சமூக அக்கறைக்கு அதில் ஏதாவது இடம் இருக்கிறதா என்று யோசியுங்கள். இன்று இளைஞர்களாக இருக்கும் அத்தனை பேரும் இப்படி யோசித்தால் இந்தியாவின் வருங்காலம் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.

இன்று 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்தான் இந்தியாவில் அடுத்த 35 ஆன்டுகளுக்குச் சகல துறைகளிலும் முக்கியப் பங்கு ஆற்றப்போகிறர்கள். இவர்கள் அனைவரும் தங்கள் எதிர்காலத் திட்டத்தில் சமூக அக்கறைக்கும் முக்கியமான இடத்தை அளித்தால், இன்னும் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் நிலை எப்படி இருக்கும்? உங்களுக்கு அடுத்து வரும் தலைமுறை எப்படி இருக்கும்?

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். கனவு காணுங்கள். உங்கள் கனவில் மலரும் சமூகம் எப்படி இருக்கிறது?

இதெல்லாம் நடக்குமா என்கிறீர்களா? அது என்னைவிட உங்களுக்குக்குத்தான் நன்றாகத் தெரியும். ஏனென்றால், நீங்கள்தான் உங்கள் எதிர்காலத்தைத் திட்டமிடப்போகிறீர்கள். நீங்கள்தான் எதிர்கால உலகையே உருவாக்கப்போகிறீர்கள்.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களிடம் கேள்வி எழுப்பினார். “எதிர்காலத்தில் என்னவாக ஆக விரும்புகிறீர்கள்?”

மாணவர்களிடமிருந்து பல விதமான பதில்கள். எல்லாமே வழக்கமான பதில்கள்தாம். ஒரே ஒரு மாணவன் மட்டும் வித்தியாசமான பதிலைச் சொன்னான்.

“நான் நாட்டின் அதிபராகப்போகிறேன்.”

ஆச்சரியமடைந்த ஆசிரியர், ஏன் என்று கேட்டார்.

“இந்த நாட்டில் உள்ள இனப் பாகுபாடுகளும் இனத் துவேஷமும் என்னைக் கடுமையாகப் பாதிக்கின்றன. இதையெல்லாம் பார்க்கப் பார்க்க வேதனையாக உள்ளது. இதைப் போக்க வேண்டுமானால் அதிகாரம் கையில் இருந்தால்தான் முடியும். எனவே நான் அதிபராக வேண்டும்” என்றான். வகுப்பறையில் சிலர் கை தட்டினார்கள். பலர் சிரித்தார்கள்.

அதே சிறுவன் பின்னொரு நாளில் அதிபராக மாறி, இனத் துவேஷத்துக்கு எதிரான சட்டத்தைப் பிறப்பித்தபோது யாரும் சிரிக்கவில்லை.

அந்தச் சிறுவன் ஆபிரஹாம் லிங்கன். அவருக்குத் தன் அக்கறை, லட்சியம் இரண்டும் ஒன்றாகவே இருந்தன. எனவே அவர் குழப்பம் ஏதுமின்றி அதைச் சாதித்தார்.

அவரைப் போலவே நீங்களும் உங்கள் அக்கறையையே லட்சியமாகக் கொண்டால் நீங்களும் இந்த நாட்டின் பிரதமராகலாம். நீங்கள் விரும்பும் மாற்றத்தைச் செய்யலாம்.

செய்வீர்களா?

- அரவிந்தன்

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon