மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

என் கருத்துகளைப் பிரதிபலிக்கும் படம் தரமணி: ஆண்ட்ரியா

என் கருத்துகளைப் பிரதிபலிக்கும் படம் தரமணி: ஆண்ட்ரியா

பல விதமான போராட்டங்களுக்குப் பிறகு நேற்று (ஆகஸ்ட்11) வெளிவந்துள்ளது இயக்குநர் ராமின் `தரமணி' திரைப்படம். இப்படத்தில் ஆண்ட்ரியா, வசந்த் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். ஆண்ட்ரியா மது அருந்தும், சிகரெட் பிடிக்கும் மாடர்ன் பெண்ணாகத் துணிச்சலான கேரக்டரில் நடித்துள்ளார். சிக்கலான பாத்திரத்தை நன்கு உள்வாங்கி நடித்துள்ள அவருக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. படம் குறித்துப் பல தரப்பினரிடமும் பாசிட்டிவான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இப்படத்தில் நடித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆண்ட்ரியா, “தரமணி படத்தில் என் கேரக்டர் இவ்வளவு துணிச்சலாக இருக்கும் என முதலில் நினைக்கவில்லை. மக்களின் வரவேற்பையும் கருத்துகளையும் பார்க்கும்போது, நான் எதிர்பார்த்ததை விடத் துணிச்சலாக இந்த கேரக்டர் தோன்றுகிறது” என்று கூறியுள்ளார். தனது சொந்த உடல் மொழியையும் யதார்த்த நடிப்பையும் வெளிப்படுத்த இயக்குநர் ராம் முழு சுதந்திரம் கொடுத்தார் என்று சொல்லும் ஆண்ட்ரியா, 'தரமணி' படத்துக்கு மனதளவில் நிறைய உழைப்பு தேவைப்பட்டது என்றும் கூறுகிறார்.

“எனது கலைத் திறமையையும் நேரத்தையும் மதிப்பவர்களோடு பணிபுரிவதே எனக்குப் பிடிக்கும். ராம் இந்த இரண்டு அம்சங்களையும் மதிப்பவர். ஒரு படம் பற்றிய அவரது அணுகுமுறையும் மிகவும் யதார்த்தமாக காட்சியமைக்கும் விதமும் எனக்கு பிடித்திருந்தது. நடிகர்களுக்கு எதையும் அறிவுறுத்தித் திணிக்காமல் படத்தின் கதை, காட்சிகள் குறித்து ஆரோக்கியமான விவாதம் நடத்தி படப்பிடிப்பு தொடங்குவார். ஆண்களுக்கு எல்லா விதங்களிலும் சமமானவர்கள் பெண்கள் என்பது நிரூபணமாகிவரும் காலம் இது. ஆண்களைச் சார்ந்து வாழும் நிலை மாறி, பெண்கள் தங்களது அன்றாடத் தேவைகளைத் தாங்களே பூர்த்திசெய்துகொள்ளும் அளவிற்கு உயர்ந்துள்ளதால் ஆண்களின் ஈகோ பாதிக்கப்பட்டிருக்கிறது. எனது இந்த சொந்தக் கருத்துகளைத்தான் 'தரமணி' படம் பிரதிபலிக்கிறது" என ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon