மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

பொருளாதார வளர்ச்சியை ஜி.எஸ்.டி. பாதிக்குமா?

பொருளாதார வளர்ச்சியை ஜி.எஸ்.டி. பாதிக்குமா?

புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி ஆரம்ப காலத்தில் சிறிது தடைகளைச் சந்தித்தாலும் நீண்டகால அடிப்படையில் பயனளிக்கும் என்றும், இதனால் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு நடைமுறையைக் கொண்டுவரும் நோக்கில் கடந்த ஜூலை 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவந்த வரி முறைகள் மாற்றியமைக்கப்பட்டு அனைத்துப் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் அதன் தரம் மற்றும் பிரிவுகளுக்கு ஏற்ப ஒரே வரி விதிக்கப்பட்டது. இதற்கு வரவேற்பு இருந்தாலும், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஜி.எஸ்.டி.யில் விலக்கு கோரியும், வரியைக் குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் சரக்கு மற்றும் சேவை வரியால் பாதிப்பு இல்லை என்றும் நீண்ட கால அடிப்படையில் அது பயனளிக்கும் என்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 11ஆம் தேதி ஹைதராபாத் பல்கலைக்கழகம் சார்பாக நடத்தப்பட்ட ஒரு விழாவில் பங்கேற்ற பின்னர் அவர் பி.டி.ஐ. ஊடகத்திடம், “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரக்கு மற்றும் சேவை வரியானது பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று நான் கருதவில்லை. இது அமல்படுத்தப்பட்டதிலிருந்து இதற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த மதிப்பு கூட்டு வரியின் நீட்சியே இது. எனவே வரி முறையில் சிறிய அளவிலான மாற்றங்களே மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்னைப் பொறுத்தவரையில் இந்தப் புதிய சரக்கு மற்றும் சேவை வரியானது நேர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon