மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

அதிமுகவில் அண்ணன், தம்பி சண்டை!

அதிமுகவில் அண்ணன், தம்பி சண்டை!

அதிமுகவில் அண்ணன் தம்பி சண்டைதான் நடைபெறுகிறது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்த தினகரனை, கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நீக்கம் செய்து தீர்மானம் கொண்டுவந்தனர். இதற்கு பன்னீர்செல்வம் தரப்பினர்,' எங்களுடைய கோரிக்கை பாதிதான் நிறைவேறியுள்ளது. மீதமும் நிறைவேற்றப்பட்டால் எங்களுடைய நிலைப்பாட்டை அறிவிப்போம்' என்று தெரிவித்திருந்தனர். தொடர்ந்து தினகரன் 'எடப்பாடி பழனிசாமி 420 போல செயல்படுகிறார்' என்று கூறினார். இதற்கு டெல்லியில் பதிலளித்த முதல்வர் பழனிசாமி,' 420 என்பது தினகரனுக்கே பொருந்தும்' தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் நீலகிரியில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக, கோவையில் இன்று( ஆகஸ்ட்- 12) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,' இரு அணிகளையும் இணைக்க பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது. தினகரன் நீக்கப்பட்டதற்கான பதில், நாங்கள் வெளியிட்ட தீர்மான அறிக்கையிலேயே உள்ளது. அதிமுகவில் தற்போது நடந்து வருவது அண்ணன் தம்பி சண்டைதான். இந்த ஆட்சி 4 ஆண்டுகளும் நீடிக்கும். அ.தி.மு.க. அணிகள் இணைப்பு என்பது 7 மாதமாக நடந்து வருகிறது. அது முடியும் போது தெரியும். பன்னீர்செல்வம் திவாகரன் என யாரும் யாரைப்பற்றியும் தரக் குறைவாக பேசினால் அது தவறுதான், விரைவில் அனைத்து பிரச்னைகளும் தீரும்.

தினகரன் 420 என்ற வார்த்தையை வாய் தவறி பயன்படுத்தி உள்ளார். ஆவேசத்தில் கூறியதாக அவரே தெரிவித்திருக்கிறார். இதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. தினகரனை 420 என முதலமைச்சர் கூறியது பற்றி எனக்கு தெரியாது.அதிமுக அரசுக்கு எதிராக ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாக கூறியுள்ளாரே என்று கேள்விக்கு,' நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் நாங்கள் வெற்றிபெறுவோம்' என்று ஏற்கனவே முதல்வர் தெரிவித்துள்ளார். அவருடைய கருத்துதான் எங்களுடைய கருத்தும்' என்று தெரிவித்தார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon