மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

பாலியல் புகாருக்கு ஆளாகும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

பாலியல் புகாருக்கு ஆளாகும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் பல இடங்களில் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த அம்மாபேட்டையில் உள்ள புனித இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில், கொடிவேரியைச் சேர்ந்த பிரபு என்பவர் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு கபடி போட்டிக்காக திருப்பூரில் உள்ள ஒரு பள்ளிக்கு மாணவிகளை அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறிப்பிடத்தக்கது. இதுபோன்று, பல சம்பவங்கள் நடக்கின்றன.

இந்நிலையில்,இதுகுறித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோது, ஒருசில ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களால் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. அதனால், பாலியல் புகார்களுக்கு ஆளாகும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஆசிரியர்கள் தங்கள் பணியைச் சிறப்பாக செய்துவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon