மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

சினிமா சர்ச்சைகள் முடிவுக்கு வருமா?

சினிமா சர்ச்சைகள் முடிவுக்கு வருமா?

தணிக்கை துறைக்கும் திரைக்கலைஞர்களுக்குமிடையேயான கருத்து மோதல் முன்பை விட கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. தணிக்கை துறை, கலைஞர்களின் படைப்புரிமையில் தலையிடுவதாகவும் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் திரைத்துறையில் கடும் எதிர்ப்பு கிளம்பிவந்த நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மத்திய தணிக்கைதுறையின் தலைவர் பதவியிலிருந்து பால்ராஜ் நிகாலனியை நீக்கிவிட்டு அந்த பதவியில் பாடலாசிரியர் ப்ரஸூன் ஜோஷியை நேற்று (ஆகஸ்ட் 11) நியமித்துள்ளது. மேலும் தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகை வித்யா பாலன், கௌதமி உட்பட 12 பேரை நியமித்துள்ளது.

பால்ராஜ் நிகாலனி 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி தணிக்கை வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலத்தில் பல சர்ச்சைகளை இந்த துறை சந்தித்துள்ளது. அபிஷேக் ஷௌபே இயக்கிய உட்தா பஞ்சாப் படத்திற்கு தணிக்கை துறை 89 கட்டுகளை விதித்தது. பின் படக்குழு மும்பை உயர் நீதிமன்றம் சென்று படத்தை வெளியிட்டது. அண்மையில் நவாஸுதின் சித்திக் நடித்துள்ள பாபுமோஷி பண்டூக்பாஸ் திரைப்படத்திற்கு தணிக்கைதுறை 48 கட்டுகளை விதித்தது. இது தொடர்பாக படக்குழு தணிக்கை துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் படத்தின் தயாரிப்பாளரான கிரண் ஷ்ரோஃப்பிடம் அதிகாரி ஒருவர், ‘ஒரு பெண்ணாக இருந்து கொண்டு ஏன் இப்படியான படங்களை தயாரிக்கின்றனர்’ எனக் கேட்டுள்ளார். மற்றொரு அதிகாரி, ‘பேண்ட், சர்ட் அணிவதால் தான் இது போன்ற படங்களை தயாரிக்கின்றனர்’ என்று கண்ணியமற்ற முறையில் பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.

பதவியில் உள்ளவர்களை மாற்றியுள்ளது மூலம் தணிக்கை துறையின் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா? அல்லது தொடர்கதையாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon