மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

மாணவர்களிடையே பாரபட்சம் காட்டிய தனியார் பள்ளி!

மாணவர்களிடையே பாரபட்சம் காட்டிய தனியார் பள்ளி!

கேரள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்கள் உடுத்தும் சீருடையில் பாரபட்சம் காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகத் தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளைத் தனித்தன்மை படுத்திக் காட்டுவதற்கும், மாணவர்களை 100 சதவிகிதம் தேர்ச்சியடைய வைப்பதற்கும் அவர்களிடையே பாரபட்சமாக நடந்து கொள்வது வழக்கமாகிவிட்டது. அதாவது டாப், ஆவரரேஜ், டல் ஸ்டுடென்ட்ஸ் என்று மூன்று வகைகளாகப் பிரித்து அவர்களுக்கு தனித்தனியே பாடம் நடத்துவதுண்டு.

இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் பண்டிக்காடு பகுதியில் உள்ள அல் ஃபாரூக் ஆங்கில நடுநிலைப்பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு வெள்ளை நிறத்திலான சீருடையையும், மற்ற மாணவர்கள் சிவப்பு நிறத்திலான கட்டம் போட்ட சீருடையையும் அணிந்து வர வேண்டும் என்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோர்கள் பாகுபாடு காட்டியதால் குழந்தைகளின் மனநிலை பாதித்துள்ளதாக மாநில குழந்தைகள் வாரியத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து பள்ளிக்கு சென்று குழந்தைகளிடம் விசாரணை நடத்திய போது மாணவர்கள் இந்த முறை தங்களை மிகவும் பாதித்துள்ளதாக, தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருவேறு சீருடை முறையைக் கைவிடுமாறு குழந்தைகள் வாரியம் அறிவுறுத்திச் சென்றுள்ளது. இருப்பினும் அப்பள்ளி இருவேறு சீருடை முறையைக் கடைப்பிடித்து வந்துள்ளது.

இந்நிலையில் ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் அப்பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தியதில் மாணவர்கள் அதே முறையில் சீருடை அணிந்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திலும், மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிலும் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து மாநில கல்வி துறை, மாவட்ட கல்வித்துறையிடம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளி முதல்வர் அப்துல் கூறுகையில், மாணவர்களின் பழக்க வழக்கங்களை தெரிந்துகொள்ள இருவேறு உடை அறிமுகம் செய்யப்பட்டது. இது மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் புகார் எழுந்ததையடுத்து இந்த முறை கைவிடப்பட்டது என்று தெரிவித்தார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon