மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

வெங்காய ஏற்றுமதியில் கட்டுப்பாடு!

வெங்காய ஏற்றுமதியில் கட்டுப்பாடு!

உள்நாட்டில் வெங்காய சப்ளையை சீராக்க, அதற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை ஒரு டன்னுக்கு 450 டாலராக நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய வர்த்தக அமைச்சகத்துக்கு உணவுத் துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பருவமழை சீசனில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.50 வரை உயர்ந்துள்ளது. வெங்காய விநியோகம் (சப்ளை) குறைவாக இருந்ததால் அதன் விலை உயரத் தொடங்கியது. எனவே உள்நாட்டில் உற்பத்தி அதிகமாக இருந்தும் போதிய சப்ளை இல்லாமல் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் ஏற்றுமதியில் சில கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பதுக்கல்காரர்களைத் தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுபற்றி மத்திய உணவுத் துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில், “சந்தையில் போதிய அளவிலான வெங்காயம் இருப்பு உள்ளது. எனினும் வெங்காயத்தின் விலை உயருவதற்கு இடைத் தரகர்களும் பதுக்கல்காரர்களே காரணம். எனவே உள்நாட்டில் வெங்காயம் சப்ளையை அதிகரிக்க வெங்காயம் மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு 450 டாலராக நிர்ணயிக்க வர்த்தக அமைச்சகத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளேன். மேலும், ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகையில் சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளேன். வெங்காயம் பதுக்கல்காரர்களைத் தடுக்க அந்தந்த மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon