மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தொடங்கியது!

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தொடங்கியது!

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா இன்று (ஆகஸ்ட் 12) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், இரண்டு மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற பின் ஆவணித் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இந்தத் திருவிழா வரும் 23ஆம் தேதி வரை (மொத்தம் 12 நாட்கள்) நடக்கும். திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இன்று மாலை, அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருள்வார். இரவு, கோவிலிலிருந்து அஸ்திரதேவருடன் தங்கப் பல்லக்கில் புறப்பட்டு, ஒன்பது சன்னதிகளிலும் உலா வருவார். ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை 8.30 மணிக்கு ஆறுமுக நயினார் சண்முக விலாசத்தில் இருந்து வெட்டி வேர் சப்பரத்தில் உலா வருவார். மாலை 4.30 மணிக்குத் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி, சுவாமி எழுந்தருள்வார். ஆகஸ்ட் 19ஆம் தேதி பச்சை சாத்தி, சுவாமி ஆறுமுகநயினார் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.

ஆவணித் திருவிழாவை முன்னிட்டுக் கோயில் நடை ஆகஸ்ட் 12, 18 ஆகிய தேதிகளில் அதிகாலை ஒரு மணிக்கும், ஆகஸ்ட் 13, 20 ஆகிய தேதிகளில் அதிகாலை 4 மணிக்கும் திறக்கப்பட்டுப் பூஜைகள் நடத்தப்படும். மற்ற நாட்களில் வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon