மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

மோடியை எதிர்க்க கம்யூனிஸ்டுகளுடன் கைகோர்ப்பேன்!

மோடியை எதிர்க்க கம்யூனிஸ்டுகளுடன் கைகோர்ப்பேன்!

நாட்டு நலன் கருதி மோடி ஆட்சியை அகற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளுடன் கைகோர்க்க தயார் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அவர் அளித்துள்ள விரிவான பேட்டியில் இருந்து சில பகுதிகளை அவ்வேடு இன்று ஆகஸ்டு 12 ஆம் தேதி வெளியிட்டிருக்கிறது. அதில் மனம் திறந்து பேசியுள்ள மம்தா பானர்ஜி,

‘’மோடி ஆட்சியை வரும் 2019 தேர்தலில் அகற்ற வேண்டும் என்ற மிகப்பெரிய நோக்கத்தோடு நான் செயல்பட்டு வருகிறேன். இதில் நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கக் கூடாது. இப்போதே அனைத்து மாநிலங்களிலும் பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை உள்ளடக்கிய க்ரேண்ட் அலையன்ஸ் எனப்படும் மெகா கூட்டணியை உருவாக்க வேண்டும். அதற்கு தலைவர், அமைப்பாளர் ஆகியோரை தேர்வு செய்ய வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் இப்போது காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை. அவர்தான் ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு காங்கிரஸை காப்பாற்றியவர்.

நான் காங்கிரஸுக்கு சொல்லும் அறிவுரை என்னவென்றால்... எல்லா மாநிலக் கட்சிகளும் மாநிலத்தில் வலுவாக இருக்க நீங்கள் உதவுங்கள்.நீங்கள் மத்தியில் வலுவாக இருக்க நாங்கள் உதவுகிறோம்.

மேற்கு வங்காளத்தில் காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து என்னை எதிர்க்கிறார்கள். நான் அவர்களை எதிர்க்கிறேன். ஆனால் அது மாநில பிரச்னை. நாட்டு நலன் கருதி நான் டெல்லியில் மார்க்சிஸ்டுகளோடும் கை கோர்க்க தயாராக இருக்கிறேன். என்னுடைய ஒரே நோக்கம் 2019 ல் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதே’’ என்று உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் மம்தா.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon