மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

வடகொரியாவுடன் போரில்லை !

வடகொரியாவுடன் போரில்லை !

போரினால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்கும் வகையில் வடகொரியாவுடன் போர் புரிவதைத் தவிர்த்து பேச்சு வார்த்தையைப் பரிசீலிக்கவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்துள்ளார்.

வடகொரியா அரசு கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து, அணு ஆயுத சோதனை மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் வகையிலான 2 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்தது அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக அமெரிக்காவின் முயற்சியால், வடகொரியாவுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்நாட்டின் ஏற்றுமதிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. இந்தப் பொருளாதார தடையால் வடகொரியாவுக்கு சுமார் 7 ஆயிரம் கோடிக்கு மேலான வருவாய் கிடைக்காமல் போனது.

அதையடுத்து இரு நட்டு தலைவர்களும் தங்களுக்குள் வார்த்தை போர் நடத்தி வந்த நிலையில் தற்போது, இரு நாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதில் திடீர் திருப்பமாக, வடகொரியா மீது அமெரிக்கா போர் தொடுக்கும் நிலையில் இல்லை என்பதை அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கலிபோர்னியாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வெளியறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி ஆகியோர் ராஜ்ய ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதை விடுத்து, இரு நாடுகளுக்குமிடையே போர் ஏற்பட்டால் அதனால் எவ்வளவு சேதம் விளையும் என்பதை நம் அனைவரும் அறிந்ததுதான். போரின் சோகமானது பேரழிவை ஏற்படுத்தும். மேலும், அதன் குணாதிசயங்கள் குறித்து மான் எதுவும் விளக்கத் தேவையில்லை. மோதலுக்கு நாடு தயாராக இருந்தாலும், நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், அமெரிக்கா எப்போதுமே பேச்சு வார்த்தையைத்தான் பரிசீலித்து வருகிறது என்று கூறினார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon