மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

அணிகளை இணைக்க டெல்லியில் கட்டப்பஞ்சாயத்து!

அணிகளை இணைக்க டெல்லியில் கட்டப்பஞ்சாயத்து!

இரு அணிகளையும் இணைக்க டெல்லியில் கட்டப்பஞ்சாயத்து நடைபெறுவதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் நேற்று துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடுவின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் அதிமுகவிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் என இரு அணியினரும் கலந்துகொண்டனர். இதற்கிடையே தினகரன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு அணிகளையும் இணைக்க டெல்லியில் பாஜக முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகின. பிரதமரை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,' நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக பிரதமரை சந்தித்தபோது வலியுறுத்தினேன்' என்று தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் இன்று (ஆகஸ்ட்-12) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்,'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களின் நலனுக்காக பிரதமரை சந்தித்து வலியுறுத்தியதாக தெரியவில்லை. டெல்லியில் அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க கட்டப் பஞ்சாயத்துதான் நடைபெறுகிறது. உடைந்திருக்கிற அதிமுகவை ஒன்றிணைக்க பிரதமர், அமித்ஷா மற்றும் இடைத் தரகர்கள் கட்டப்பஞ்சாயத்து நடத்தி வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று தெரிவித்தார்.

ஏற்கனவே அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவினைப் பயன்படுத்தி பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்வதாக திமுக செயல் தலைவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். அப்போது ஸ்டாலினுக்கு பாஜக கண்டனம் தெரிவித்தது. இப்போது அதே வார்த்தையை காங்கிரஸ் தலைவரும் பயன்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon