மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

எனக்கு நானே பாதுகாப்பு! : ஸ்வேதா மேனன்

எனக்கு நானே பாதுகாப்பு! : ஸ்வேதா மேனன்

நான் அவன் இல்லை 2, அரவான், துணை முதல்வர், இணையதளம் உட்படப் பல படங்களில் நடித்தவர் நடிகை ஸ்வேதா மேனன். தமிழ் மட்டுமல்லாது இந்தி, கன்னடம் , தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளிலும் நடித்துவருகிறார். தற்போது மலையாளத்தில் பிஸியாக நடித்துவருகிறார். கேரளாவில் ஒரு நடிகை கடத்தப்பட்டுப் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான சம்பவத்தால் தமிழிலும் மலையாளத்திலும் நடிகைகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றனர். மலையாள சினிமா நடிகைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் இணைந்து டபிள்யூ. சி.சி. என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த அமைப்பில் மஞ்சு வாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்பட பல முன்னணி நடிகைகள் இணைந்துள்ளனர். இதன் மூலம் பெண் உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுக்கவும் முடிவு செய்து இருக்கிறார்கள்.ஆனால் ஸ்வேதா மேனன், லட்சுமிபிரியா உள்பட சில நடிகைகள் இதில் சேரவில்லை. இந்த அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஸ்வேதா மேனன் மலையாளப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் “எனக்கு இந்த பெண்கள் நல அமைப்பின் உதவி தேவை இல்லை. என் பாதுகாப்பை நானே உறுதி செய்துகொள்வேன். எங்களுக்கு AMMA அமைப்பினர் எந்த நேரத்திலும் எனக்கு உறுதுணையாக இருக்கும். நடிகர், நடிகளுக்காக உதவியாக இருக்கிறது இந்த அமைப்பு. அதே நேரத்தில் என் தனிப்பட்ட முறையில் பெண்களுக்கு நேரிடும் எல்லாப் பிரச்சினைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பேன்” என்றார்.

ஓணம் பண்டிகை குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பதாகத் தகவல் வந்துள்ளதே எனக் கேட்கப்பட்டபோது, “இது குறித்து AMMA அமைப்பினர் எதுவும் என்னிடம் தெரிவிக்கவில்லை. அப்படி நடந்திருந்தால், அதைப் பற்றி நான் அறிந்திருப்பேன். அந்த அறிக்கைகளின் ஆதாரம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon