மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

தொடரும் சாதனைகள்!

தொடரும் சாதனைகள்!

டெஸ்ட் போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ள இந்திய அணி தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்திய அணியின் வீரர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அதிக விக்கெட்டுகளை குறைந்த டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியதிலும், பேட்ஸ்மேன்கள் புஜாரா மற்றும் ரஹானே சதங்கள் ரன்கள் குவிப்பிலும் சாதனைகளை குவித்த வண்ணம் இருக்கின்றனர்.

அதேபோல் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி கடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றியது மட்டுமில்லாமல், தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றிய அணி என்ற பெருமையையும் பெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று (ஆகஸ்டு 12)காலை தொடங்கிய 3ஆவது டெஸ்டில் விளையாடி வரும் இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக தவான் மற்றும் ராகுல் களமிறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். ராகுல் தொடர்ச்சியாக அடித்த 7ஆவது அரைசதம் இதுவாகும். இதன் மூலம் தொடர்ச்சியாக 7 அரைசதங்களை அடித்த 9ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார் அவர். உணவு இடைவேளை வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 134 ரன்களை சேர்த்திருக்கிறது. ராகுல் 69 ரன்களுடனும், தவான் 64 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணிக்கு வலுவான தொடக்கம் அமைத்து தரப்பட்டுள்ளதால், இந்த போட்டியிலும் 600 ரன்களுக்கு மேல் சேர்க்க வாய்ப்புள்ளது. அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் தொடர்ச்சியாக அதிக முறை 600 ரன்களை கடந்த அணி சாதனையை இந்திய அணி படைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon