மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

கொட்டும் மழையில் பவள விழா மலர் வெளியீடு!

கொட்டும் மழையில் பவள விழா மலர் வெளியீடு!

‘முரசொலி’ நாளிதழின் பவள விழா நிகழ்ச்சியையொட்டி இரண்டாம் நாள் விழாவாக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டுத் திடலில் நேற்று ஆகஸ்ட் 11ஆம் தேதி மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றபோது, பலத்த மழை பெய்ததால், பவள விழா ஒத்தி வைக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

திமுக-வின் அதிகாரபூர்வ அரசியல் நாளிதழான ‘முரசொலி’யின் பவளவிழா நேற்று முன்தினம் மாலை கலைவாணர் அரங்கில் நடைபெற்றபோது, முன்னணி பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் என பலர் பங்கேற்றார்கள். நேற்று இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டுத் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சிபிஐ-யின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன், இந்திய தேசிய லீக் காதர் மொய்தீன், கட்டடத் தொழிலாளர் முன்னேற்றக் கழகத்தின் பொன்.குமார் போன்ற தலைவர்கள் பங்கேற்றனர். விழா தொடங்கியதும், திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் வரவேற்புரையாற்றினார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, மழை கொட்டத் தொடங்கியது. மேடையில் இருந்த தலைவர்கள் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் பேசத் தொடங்கினர். திமுக தொண்டர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் மழையில் நனைந்தபடியே தலைவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

ஆனால், தொடர்ந்து மழை வேகமாகப் பெய்ததால், முரசொலி பவள விழா மலர் வெளியீடு நிகழ்ச்சி அவசரமாக நடத்தப்பட்டது. பவள விழா மலரை மு.க. ஸ்டாலின் வெளியிட சிபிஐ மூத்தத் தலைவர் நல்லகண்ணு பெற்றுக் கொண்டார். அதையடுத்து, நல்லகண்ணு பேசுகையில், “பவள விழா காணும் ‘முரசொலி’ பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் உருவாக்கிய புதிய சமுதாயம் அமைப்பதற்கான கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்று புதிய மாற்றத்தைத் தொடங்கியது. வருங்காலத்தில் முன்பைவிட உத்வேகத்தில் செயல்பட வேண்டும். அதனை ஸ்டாலின் செயல்படுத்த வேண்டும்” என்று பேசினார்.

தொடர்ந்து மழை அதிகமாகப் பெய்ததால் முரசொலி பவள விழா ஒத்தி வைக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மிகப் பெரிய அளவில் மீண்டும் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்த ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon