மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

காலாவதியான எம்.டி.சி. பேருந்துகள்!

காலாவதியான எம்.டி.சி. பேருந்துகள்!

பெருநகரப் போக்குவரத்துக்குச் சொந்தமான பல பேருந்துகள் காலாவதியான நிலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் கழகம் புதிதாக 250 பேருந்துகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது. பேருந்துகள் பலவும் காலாவதியான நிலையில் உள்ளதே இதற்கு முக்கியக் காரணம்.

எம்.டி.சி-க்குச் சொந்தமான 3,900 பேருந்துகளில் சுமார் 1,700 பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட அளவு எல்லைக்கும் மேலாக ஓடிக்கொண்டிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாகத் துறைக்குள் நடத்தப்பட்ட தணிக்கையில் குறைந்தது 600 பேருந்துகள் வரை 12 லட்சம் கிலோமீட்டர் அளவுக்கு ஓடியுள்ளது தெரியவந்துள்ளது. அதிகபட்ச வரம்பே 6 லட்சம் கிலோமீட்டர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

3,000 பேருந்துகள் வரை மிகவும் பழையனவாக உள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகள் சேவைக்குப் பின் அரசுப் பேருந்துகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் வழிகாட்டுநெறி. ஆனால், எம்.டி.சி. இதைப் பின்பற்றாமல் தொடர்ந்து பழைய பேருந்துகளை இயக்கிவருகிறது. தற்போதைய நிலையில், 400 பேருந்துகள் மட்டுமே இரண்டு ஆண்டுகளுக்குக் குறைவானவை. 2014ஆம் ஆண்டில் 5.12 ஆண்டுகளாக இருந்த எம்.டி.சி. பேருந்துகளின் சராசரி ஆயுள் தற்போது 7.24 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

2011 முதல் 2016 வரையில் 7,153 பழைய பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகள் மாற்றியமைக்கப்படும் என்று தமிழக அரசு பலமுறை தெரிவித்துள்ளது. அந்த வாக்குறுதிகள் கிடப்பிலேயே உள்ளது. சமீபத்தில்கூட, புதிதாக 2,000 பேருந்துகள் இணைக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக எம்.டி.சி. அதிகாரி ஒருவர் கூறுகையில், “விரைவில் இணைக்கப்படவுள்ள 9,153 பேருந்துகளில் எம்.டி.சி-க்கு 250 பேருந்துகள் கிடைக்கும். ஆனால், அந்தப் பேருந்துகள் புதிதாகச் சேர்க்கப்படுமா அல்லது பழைய பேருந்துகளை அப்புறப்படுத்திவிட்டு அதற்கு மாற்றாக இணைக்கப்படுமா என்பது எங்களுக்குத் தெரியாது. ஒருவேளை புதிய பேருந்துகள் சேர்க்கப்பட்டால், கடந்த இரண்டு ஆண்டுகளில் எம்.டி.சி-யில் சேர்க்கப்படும் பேருந்துகளின் முதல் தொகுப்பாக அவை இருக்கும்” என்று தெரிவித்தார்.

பழைய பேருந்துகள் பழுது நீக்கப்பட்டுச் சரி செய்யப்படுவதாகக் கூறப்பட்டாலும் அவை சரிவர இயங்குவதில்லை என்று ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அதிக அளவு விபத்துகள் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அத்தகைய பேருந்துகளில் அதிர்வுகள் அதிகமாக உள்ளதாகப் பயணிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.

சென்னைப் பெருநகர அபிவிருத்தி ஆணையத்தின் ஆய்வுப்படி, 2020இல் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய எம்.டி.சி-யில் 7,000 பேருந்துகள் தேவைப்படும். அதில் பாதி அளவு பேருந்து மட்டுமே தற்போது எம்.டி.சி-யிடம் உள்ளது. 2020-க்கு இன்னும் மூன்று ஆண்டுகளே உள்ள நிலையில் இந்தத் தேவையை எம்.டி.சி. எப்படிப் பூர்த்திசெய்யப் போகிறது என்பது கேள்விக்குறி.

ஏராளமான பேருந்துகள் நீதிமன்றங்கள் மூலம் ஜப்தி செய்யப்பட்டுள்ளதாலும் பொதுமக்களின் தேவைக்கேற்ப பேருந்து சேவைகளை இயக்க முடியாமல் அரசு தடுமாறிவருகிறது.

அரசாங்கத்தின் இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தித் தனியார் ஆம்னி பேருந்துகளும் சம்பாதிக்க தொடங்கிவிட்டன.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon