மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

எல்லையில் போர் பதற்றம்: ராணுவ வீரர்கள் குவிப்பு!

எல்லையில் போர் பதற்றம்:  ராணுவ வீரர்கள் குவிப்பு!

இந்திய, சீன எல்லைப் பகுதிகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து இந்தியப் படை வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தில் இந்தியா – பூடான் - சீனா ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடமான டோக்லாம் பகுதியில் இந்திய ராணுவத்தினர் அமைத்திருந்த இரண்டு பதுங்கு குழிகளைச் சீன ராணுவத்தினர் கடந்த ஜூலை 1ஆம் தேதி தாக்கி அழித்தனர். மேலும், அந்தப் பகுதியில், சீன அரசு அத்துமீறிச் சாலை அமைத்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில், அந்தப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் கூடுதலாகக் குவிக்கப்பட்டனர். பிரச்னைக்குரிய டோக்லாம் பகுதியிலிருந்து இந்திய படைகளைத் திரும்பப் பெறும்படி சீன ராணுவம் கூறியதை இந்திய ராணுவம் ஏற்கவில்லை.

கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு சீன ராணுவத்தின் செயலுக்கு பூடானும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தெற்காசியப் பிராந்தியத்தில் தன்னை வலிமை மிகுந்த நாடாகக் காட்டிக்கொள்ளும்விதத்தில் சீனா தொடர்ந்து இந்தியாவுக்குப் பல்வேறு இடையூறுகளை விளைவித்து தொல்லை கொடுத்து வருகிறது. அதன் காரணமாகக் கடந்த ஒரு மாத காலமாக இந்திய - சீன ராணுவத்தினர் இடையே சிக்கிம் மாநில பகுதியில் மோதல் போக்கு நீடித்துவருகிறது.

இந்த நிலையில், சீன எல்லையை ஒட்டியுள்ள சிக்கிம் மற்றும் அருணாசலப்பிரதேசத்தின் எல்லை பகுதிகளில் இந்தியா தனது படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் ராணுவ வீரர்களைக் குவித்துவருகிறது. மேலும், நாட்டின் கிழக்கு பகுதியில் முகாமிட்டுள்ள வீரர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon