மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

ஆதார் - பான் இணைப்பு: காலக்கெடு இல்லை!

ஆதார் - பான் இணைப்பு: காலக்கெடு இல்லை!

‘ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கக் கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை’ என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாள் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஆதாருடன் பான் கார்டு இணைக்கப்பட்டால்தான் வருமான வரி ரிட்டன் செலுத்தும் நடவடிக்கை முறையாகச் செயல்படுத்தப்படும் என்று நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் தெரிவித்திருந்தது.

இதுபற்றி மத்திய நிதியமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில், ‘வருமான வரித்துறையின் இணையதளத்தில் வரி தாக்கல் செய்ய ஆதார் எண் அல்லது ஒப்புகை எண் மட்டும் தெரிவிக்கப்பட்டால் போதும் என்று அரசு முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைத்துக் கொள்ளலாம். இருப்பினும், ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்படும் வரை வருமான வரி ரிட்டன் செயல்படுத்தப்படாது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வருவாய்த் துறைச் செயலாளர் ஹஸ்முக் அதியா பேசுகையில், “கடைசி நாளுக்குள் ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், “ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கக் கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை” என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். “ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கக் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?” என்று மக்களவையில் நேற்று (ஆகஸ்ட் 11) கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இல்லை” என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பதிலளித்துள்ளார். ஜூன் 28ஆம் தேதி வரையில் 2 கோடிப் பேருக்கும் மேலானோர் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைத்துள்ளனர். நாட்டில் 111 கோடி பேருக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சுமார் 25 கோடிப் பேரிடம்தான் பான் கார்டு உள்ளது என நிதியமைச்சகத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon