மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

பணியைத் தொடர்ந்து செய்வேன்: கிரண்பேடி

பணியைத் தொடர்ந்து செய்வேன்: கிரண்பேடி

‘நான் தற்காலிக நபராக இருக்கலாம். ஆனால், புதுச்சேரி நிரந்தரமானது. நான் என்னுடைய பணியைத் தொடர்ந்து செய்வேன்’ என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுவையில் ஆளுநருக்கும், முதல்வர் நாராயணசாமி அரசுக்கும் இடையே நடக்கும் பனிப்போர் தொடர்ந்துவருகிறது. இந்நிலையில், புதுச்சேரி துறைமுகப் பணிகளில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டினார். இதுகுறித்துப் பல்வேறு கேள்விகளையும் முன்வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கந்தசாமி, “புதுவையின் வளர்ச்சிக்கு ஆளுநர் கிரண்பேடி எவ்வித நிதியையும் பெற்றுத்தரவில்லை, புதுச்சேரியின் எதிரியாகச் செயல்பட்டுவருகிறார்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் கிரண்பேடி தன்னுடைய சமூக வலைதளத்தில் நேற்று (ஆகஸ்ட் 11) ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார். “நான் தற்காலிக நபராக இருக்கலாம். ஆனால், புதுச்சேரி நிரந்தரமானது. நான் தொடர்ந்து என்னுடைய பணியைச் செய்வேன். நான் ஆளுநராகப் பொறுப்பேற்றபோது புதுவை வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன் என்று கூறியிருந்தேன். அதேபோல அனைத்துத்துறைகளும் சிறப்பாக செயல்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்வதும் எனது கடமை. ஒரு திட்டம் என்று வரும்போது அதன் பலம், பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள் என அனைத்தையும் பார்க்க வேண்டும். அதைத்தான் துறைமுகப் துறையின் பணியிலும் செய்தேன்.

இந்த மாநிலத்தின் நிர்வாகி என்ற முறையில் சட்டங்களையும், விதிமுறைகளையும் மீறாமல் பணிகளை நடத்த வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது. அரசு எடுக்கும் முடிவுகளை மக்களுக்குத் தெரிவிப்பது அரசின் கடைமையாகும் தவறான முடிவு எடுத்தால் அது மக்களைப் பாதிக்கும். எதுவாக இருந்தாலும் உரிய ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தை மூலம் செயல்படுவதே சரியானதாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon