மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

சாதனை படைக்குமா இந்திய அணி?

சாதனை படைக்குமா இந்திய அணி?

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இன்னிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று (ஆகஸ்டு 12) காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி இந்த டெஸ்ட்டிலும் வென்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். பேட்டிங்கில் புஜாரா மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் இரண்டு சதத்துடன் 301 ரன் குவித்துள்ளார். இதுதவிர தவான் (234 ரன்), ரகானே (212), லோகேஷ், ராகுல் போன்றவர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

சிறப்பாக செயல்பட்டு வந்த ஜடேஜா இந்தப் போட்டியில் விளையாட பி.சி.சி.ஐ. தடை விதித்துள்ளதால் இந்திய அணிக்கு சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் இரண்டு போட்டிகளிலும் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளார். அவருக்குப் பதிலாக அக்சர் பட்டேல் இடம்பெறுவாரா அல்லது குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று போட்டி தொடங்கிய பின்னரே தெரியவரும். இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. தொடரை முழுமையாக இழக்காமல் இருக்கும் வகையில் இலங்கை அணி வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். முன்னணி சுழற்பந்து வீரரான ஹெராத் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்தப் போட்டியிலிருந்து விலகியது இலங்கை அணிக்கு பாதிப்பே.

இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வேறு எந்த அணிகளும் இந்தச் சாதனையை பெற்றதில்லை. இந்திய அணி இந்தப் போட்டியிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி புதிய சாதனை படைக்குமா என பொறுத்திருந்து காண்போம்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon