மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

மாட்டிறைச்சி சோதனைக்கு அனுமதி கோரிய மகாராஷ்டிரா!

மாட்டிறைச்சி சோதனைக்கு அனுமதி கோரிய மகாராஷ்டிரா!

மாட்டிறைச்சி குறித்து வீடுகளில் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு நேற்று (ஆகஸ்ட் 11) உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.

மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்யக் கூடாது என்று கடந்த மே மாதம் மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இது மறைமுகமாக மாட்டிறைச்சி சாப்பிடுவதை தடை செய்கிறது என்று மத்திய அரசின் உத்தரவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு அடிப்படையில் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு, வீடுகளில் மாட்டிறைச்சி குறித்து சோதனை நடத்த அனுமதி வேண்டும் என்று நேற்று (ஆகஸ்ட் 11) உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.

மகாராஷ்டிராவின் விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்துக்கு (1995) கடந்த 2005ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். ஆனால், இந்தச் சட்டத்தில் உள்ள பிரிவு 5-டி மாட்டிறைச்சி வைத்திருப்பதாக சந்தேகப்படும் நபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய அனுமதிக்கிறது. மேலும், மாட்டிறைச்சி வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் வீடுகளில் நுழைந்து சோதனை நடத்தவும் அனுமதி அளிக்கிறது. இது தனிமனித அடிப்படை உரிமையை பாதிப்பதாக உள்ளது என்று அம்மாநில உயர் நீதிமன்றம் இந்தச் சட்டப் பிரிவை நீக்கியது. மகாராஷ்டிராவில் ஏற்கெனவே 1976ம் ஆண்டு பசுவதை தடுப்புச் சட்டமும் உள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநில அரசு இந்த சட்டப் பிரிவு நீக்கப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், மகாராஷ்டிரா உயர் நீதிமன்றம் தனிநபர் உரிமை என்பதை தவறுதலாக அடிப்படை உரிமை என்று குறிப்பிட்டு மாநில விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள 5-டி பிரிவை நீக்கியுள்ளது. அதனால், உச்ச நீதிமன்றம் மாட்டிறைச்சி குறித்து போலீஸார் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon