மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

மாசுபட்ட கதிராமங்கலம்: மறைக்கப்பட்ட உண்மைகள்!

மாசுபட்ட கதிராமங்கலம்:  மறைக்கப்பட்ட உண்மைகள்!

ஓ.என்.ஜி.சி. (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்) மற்றும் சென்னை பெட்ரோலியம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மண், நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீர் மாதிரிகளை ஆய்வு செய்துள்ளது கடலோர வள ஆய்வு மையம் (The Coastal Resource Centre). அந்த ஆய்வில் மேலும் CRC (Coastal Resource Centre) கதிராமங்கலத்தில் நடந்த எண்ணைக் கசிவு குறித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில்தான் மேற்கண்ட முடிவு வெளியாகியுள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த சர்வதேச தரத்திலான செயல்முறைகளைப் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டையும் பகிரங்கமாக முன்வைத்துள்ளது.

இந்த ஆய்வின்போது சேகரிக்கப்பட்ட ஏழு மாதிரிகளை பகுத்தாய்வு செய்தபோது, எண்ணெய் பிரித்தெடுத்தல், மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பின்போது வெளியான ஹைட்ரோ கார்பனால் கதிராமங்கலம் கிராமப் பகுதியே மாசுபட்டிருப்பதாக CRC ஆதாரத்தோடு கூறியுள்ளது.

கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டபோதும் அதில் தீப்பற்றியபோதும் அதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஆனால், கதிராமங்கலம் கிராம மக்கள் எங்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்துவிட்டார்கள் என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குற்றம்சாட்டியது.

ஜூன் 30ஆம் தேதி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய்க் கசிவு குறித்து ஆய்வு செய்ய ஸ்ரீராம் ராமமூர்த்தியின் வயல்வெளியில் இருந்து மண் மற்றும் தண்ணீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஒவ்வொரு மாதிரியிலும், நீர்ப்பாசனம் அல்லது மண்ணுக்குத் தேவையான நீர்மம் நிறைந்த மேற்பரப்பு நீரில் பெட்ரோலியம் ஹைட்ரோ கார்பன் மாசுகள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. எண்ணெய்க் கசிவால் மாசுபடுத்தப்பட்ட பகுதிகளைச் சுத்தம் செய்வதற்கு கதிராமங்கலம் கிராம மக்கள் மீண்டும் மீண்டும் ஓ.என்.ஜி.சி-யிடம் கோரிக்கை வைத்தபோதும் அதைப் புறக்கணித்துவிட்டது அந்த நிறுவனம் என்று CRC அறிக்கை கூறுகிறது.

ஜூன் 30 எண்ணெய்க் கசிவு

கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது ஜூலை 1ஆம் தேதிதான் கண்டுபிடிக்கப்பட்டது. கிராமத்தில் சுற்றியுள்ள வயல்களில் பழுப்பு நிறப் பொருள் குவிந்து கிடப்பதை மக்கள் அதிர்ச்சியோடு கவனித்தனர்.

ஓ.என்.ஜி.சி. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் ஆய்வு நிறுவனம். இந்த நிறுவனம் கதிராமங்கலத்தைச் சுற்றிலும் 29 எண்ணெய் வயல்களை அமைத்திருக்கிறது. ஜூன் 30 அன்று ஏற்பட்ட எண்ணெய்க் கசிவினால் உண்டான கழிவுகளை அகற்ற ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள் வந்தபோது அவர்களை கதிராமங்கலம் கிராம மக்கள் அனுதிமதிக்கவில்லை என்று கூறுகிறது ஓ.என்.ஜி.சி. இதையறிந்த காவல் துறையினர், துணை ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தனர். அப்போது மக்கள் யாரையும் தடுக்கவில்லை. அன்று மாலை எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட இடத்தில் தீப்பிடித்தது. கிராம மக்கள்தான் தீப்பற்ற வைத்தார்கள் என்று காவல்துறை குற்றம்சாட்டியதோடு அவர்கள் மீது தாக்குதலும் நடத்தியது. ஆனால், கதிராமங்கலம் போராட்டக்காரர்கள்தான் தங்கள் நிறுவன அதிகாரிகளையும், காவல்துறையினரையும் தாக்கியதாக ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

“திறம்பட உற்பத்தி செய்ய முடியாத கிணறுகளில் ஒன்றைச் சரி செய்ய நாங்கள் சென்றிருந்தோம், அப்போது அந்தக் கிராம மக்கள் திரளாக அங்கே கூடி எங்களைத் தடுத்துவிட்டார்கள். இறுதியாக, ஐந்து நாள்களுக்குப் பிறகு, காவல்துறையினரின் பாதுகாப்புடன் நாங்கள் எங்கள் பணியை மேற்கொண்டோம். அதற்குப் பிறகும், நிறைய எதிர்ப்புக்கள் இருந்தன” என்று ஓ.என்.ஜி.சி. நிறுவன துணை மேலாளர் குல்பீர் சிங் கூறினார்.

இந்த நிலையில் கடலோர வள ஆய்வு மையத்தின் ஆய்வறிக்கை இந்தப் பிரச்னையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: scroll.in

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon