மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

கார்ப்பரேட் கடனை ரத்து செய்யவில்லை!

கார்ப்பரேட் கடனை ரத்து செய்யவில்லை!

கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்றுள்ள கடன் தொகையில் ஒரு ரூபாயைக்கூட அரசு தள்ளுபடி செய்யவில்லை என்று அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

நேற்றைய (ஆகஸ்ட் 11) மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின்போது, மத்திய அரசானது கார்ப்பரேட் நிறுவனக் கடன்களை தள்ளுபடி செய்வதாக எதிர்க்கட்சிகள் முழக்கமிடத் தொடங்கின. அப்போது பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “கடனை ரத்து செய்வதென்பது வங்கிகளின் தனிப்பட்ட வர்த்தகம் சார்ந்த முடிவு. அதில் அரசு தலையிடாது. விவசாயக் கடன்கள்கூடக் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு சார்பில் தள்ளுபடி செய்யப்படவில்லை. மத்திய அரசானது கார்ப்பரேட் கடன் ஒரு ரூபாயைக்கூட தள்ளுபடி செய்யவில்லை” என்று கூறினார்.

எதிர்க்கட்சிகள் இதுபோல அரசுமீது குற்றம்சாட்டுவதற்கு முன்பாக உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொண்ட பின்னரே பேச வேண்டும் என்று சொன்ன நிதியமைச்சர், வாராக்கடன் குறித்த விவரங்களை வெளியிட்டார். “இந்த ஆண்டு மார்ச் மாத இறுதி வரையில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த பிரிவுகளில் வாராக்கடன் அளவு ரூ.62,307 கோடி. 2016ஆம் ஆண்டின் மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி விவசாயக் கடன் ரூ.51,964 கோடி. எனினும் சில வங்கிகள் வேளாண் துறைக்கான விவசாயக் கடனை ரூ.7,548 கோடி வரையில் ரத்து செய்துள்ளன. மத்திய அரசு சார்பில் இந்த நிதியாண்டில் விவசாயத்துறை மேம்பாட்டுக்காக ரூ.2.92 லட்சம் முதலீடு செய்யப்படவிருக்கிறது” என்று தெரிவித்தார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon