மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

ஓ.பி.எஸ். அணிக்கு உதவிய முதல்வரின் தீர்மானம்!

ஓ.பி.எஸ். அணிக்கு உதவிய முதல்வரின் தீர்மானம்!

‘உண்மையான அதிமுக தாங்களே’ என்று ஓ.பி.எஸ். அணியினர் தேர்தல் ஆணையத்தில் நேற்று ஆகஸ்ட் 11ஆம் தேதி புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

‘அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது கட்சி சட்டவிதிகளுக்கு எதிரானது’ என்று ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே முறையிடப்பட்டது. அதையடுத்து, சசிகலா நியமனம் குறித்து பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் தெரிவித்ததால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் சசிகலா அதிமுக-வின் பொதுச்செயலாளர், தினகரன் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்று அமைச்சர்கள் அதிமுக-வினர் கையெழுத்திட்ட ஒன்றரை லட்சம் பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தினகரனின் நியமனம் செல்லாது. என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பதில் தெரிவிக்கும் வகையில் தினகரன் பேசியபோது, துணைப் பொதுச்செயலாளராக செயல்பட தனக்கு எந்தவொரு தடையுமில்லை என்றும், தீர்மானம் குறித்து யாரவது தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தால், முதல்வர் உள்பட அனைவரும் பதவி விலக நேரிடும்' என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றிய தீர்மானத்தை அடிப்படையாக வைத்துத் தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், செம்மலை, மாஃபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூடுதல் மனுவைத் தாக்கல் செய்தனர். அதில் தாங்களே உண்மையான அதிமுக என்றும் தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon