மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

மெர்சலான தமிழன் சாங்!

மெர்சலான  தமிழன் சாங்!

இன்றையச் சூழலில் ‘தேவை ஒரு நல்ல தலைவன்’ என மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில், ரஜினி உட்பட நடிகர்கள் பலரும் அரசியல் பிரவேசம் குறித்து பேசி வருகின்றனர். ஆளும் கட்சியின் ஆட்சி குறித்து ஒரே பேட்டியில் அதிர வைத்த கமலஹாசன், தொடர்ந்து தனது வலைதளத்தில் பல்வேறு கருத்துகளை முன்மொழிந்து வருகிறார். அதுமட்டுமல்லாது இன்றைய அரசியல் சூழலுக்கேற்ப பல வருடங்களாக கிடப்பில் இருந்த ‘தலைவன் இருக்கிறான்’ படத்தை மெருகேற்றி கொண்டு வருகிறார். இது ஒருபுறமிருக்க, விஜய் தனது ‘தலைவா’ படத்தில் துணிந்து அரசியல் பேச முற்பட்டதுபோது அன்றைய ஆளும்கட்சி பல்வேறு நெருக்கடிகளைத் தந்தது. அதன்பின்னர் அரசியல் குறித்தான வசனங்கள் விஜய்யின் படங்களில் அதிகம் இல்லாமல், சமூகப் பார்வையோடு படங்கள் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில் துணிச்சலாக ‘மெர்சல்' படத்தின் மூலம் அரசியல் பேசவுள்ளார் விஜய். அதற்கு நேற்று (ஆகஸ்ட் 11) வெளியான ‘ஆளப் போறான் தமிழன்' பாடல் ஒன்றே சாட்சி.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தில் கிராமத்து இளைஞர், மருத்துவர், மேஜிக் நிபுணர் என மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தமிழனின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது என்பதற்கு இப்படத்தின் போஸ்டர்களும் ‘ஆளப் போறான் தமிழன்’ பாடலுமே நமக்குச் சொல்கிறது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடலாசிரியர் விவேக் வரிகளில் வெளிவந்துள்ள இப்பாடல் முழுக்க தமிழ் மொழிப்பற்றும், தமிழன் என்கிற உணர்வும், தமிழ் மக்களுக்கு இன்றைய தேவை தமிழ் தலைவன் என்கிற அரசியலையும் பேசிச் செல்கிறது. ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே... வெற்றி மகன் வழிதான் இனி எல்லாமே... வீரன்னா யாருன்னு அந்த நாட்டுக்குச் சொன்னானே... வாயில்லா மாட்டுக்கும் அட நீதியை அவன் தந்தானே... என்னும் வரிகளும் தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிறேரும்... காத்தோடு கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்... என இப்படி பாடல் முழுக்க தமிழ், தமிழன் என்கிற உணர்வுகள் ஆங்காங்கே தெறிப்பதோடு தலைமைப் பண்பு குறித்து உரக்க ஒலிக்கிறது. இப்பாடல் பட்டித்தொட்டி எங்கும் எதிரொலிப்பதோடு உலகம் முழுக்க இருக்கும் தமிழனின் காதுகளில் ஓங்கி ஒலிக்கும் என்பது இப்பாடலைக் கேட்கும் ஒவ்வொருவரும் உணரலாம்.

ஆளப்போறான் தமிழன் பாடல்

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon