மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட பொறியியல் கல்லூரிகள் மூடல்!

குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட பொறியியல் கல்லூரிகள் மூடல்!

நாடு முழுவதும் 30 சதவிகிதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பொறியியல் கல்லூரிகளை மூட இந்தியத் தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 10,361 பொறியியல் கல்லூரிகளில் 27 லட்சம் இடங்கள் காலியாக உள்ள நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 30 சதவிகிதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பொறியியல் கல்லூரிகளை அடுத்த ஆண்டு முதல் மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ-யின் தலைவர் அனில் டி.சகஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளாக ஏஐசிடிஇ தேவையின்மை மற்றும் கல்வியின் தரம் குறைவு உள்ள பொறியியல் கல்லூரிகளைக் குறைப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது. அதிகமான பொறியியல் கல்லூரிகள், குறைந்த மாணவர் சேர்க்கை காரணமாக தாங்களாகவே கல்லூரிகளை மூட விருப்பம் தெரிவித்துள்ளனர். மூடும் பொறியியல் கல்லூரிகளுக்கான அபராதத் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது. ஏஐசிடிஇ தகவல் தரவின்படி, நாடு முழுவதும் ஏஐசிடிஇ-யின் அங்கீகாரம் பெற்ற 10,361 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், 37 லட்சம் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 27 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. பல கல்லூரிகளை மூடுவதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கைத் திறன்களையும், உண்மையான வாழ்க்கையின் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்துவருகிறது. அதனால், ஏஐசிடிஇ நேஷனல் ஸ்டூடன்ட் ஸ்டார்ட் அப் கொள்கையை உருவாக்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் தொழில்நுட்ப மற்றும் உயர்கல்வி அமைச்சரான கிரண் மகேஸ்வரி கூறுகையில், “ராஜஸ்தானில் உள்ள 220 அரசுக் கல்லூரிகளில் அரசு கலைக்கூட ஆய்வகங்கள் அமைக்கப்படும். உலகமயமாக்கப்பட்ட இந்த யுகத்தில் மொழி அறிவு என்பது அவசியமான ஒன்றாகும். மொழி ஆய்வகங்கள் ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கான நான்கு அடிப்படைத் தேவைகளில் உதவுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon