மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

அரசு தரப்பு ஆஜர் - தயாரிப்பாளர்கள் ஆப்சென்ட்!

அரசு தரப்பு ஆஜர் - தயாரிப்பாளர்கள் ஆப்சென்ட்!

திரைப்படத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தையில், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் உடன்பாடு ஏற்படாததால், கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை பெப்சி அமைப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. இதனால் 40-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் தடைபட்டது. இதன்பின் இருதரப்புக்கும் இடையே சுமுக உறவை ஏற்படுத்தும்விதமாக இரு தரப்பினரோடு அரசு தரப்பினரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுத்த நிலையில் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ‘எங்கள் தரப்பில் இருந்து என்ன சம்பளம் கேட்கப்படுகிறதோ அதைக் கொடுத்தால் மட்டும் போதும். இனிவரும் காலங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம்’ என்று பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார்.

மூன்று தரப்பும் கலந்துகொண்ட முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 11) இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை சென்னை டிஎம்எஸ்ஸில் உள்ள தொழிலாளர்கள் நல வாரிய அலுவலகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து யாரும் கலந்துகொள்ளாததால் பேச்சுவார்த்தை நடைபெறாமல் போனது.

பெப்சி அமைப்பு 25,000-க்கும் அதிகமான தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டது. திரைத்துறையில் இந்த அமைப்பின் பங்களிப்பு முக்கியமானது. அதேபோல் தயாரிப்பாளர்கள் இல்லாமல் படங்கள் உருவாகாது. இந்த இரு அமைப்புகளுக்கும் இடையேயான பிரச்னைகளைப் பேசி தீர்த்து உடனடியாக ஒரு முடிவுக்கு வரவில்லையென்றால் அது தமிழ் சினிமாவையும் அதை நம்பியுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களையும் நேரடியாக பாதிக்கும். அரசு தரப்பிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தும் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து ஆட்கள் வராதது பிரச்னையை மீண்டும் சிக்கலாக்கவே வழிவகுத்துள்ளது. இந்த நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon