மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

சிறப்புக் கட்டுரை: பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்க புது முயற்சி! - எம்.ஜே.பிரபு

சிறப்புக் கட்டுரை: பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்க புது முயற்சி! - எம்.ஜே.பிரபு

பாரம்பரிய வேளாண் விதைகளைப் பாதுகாக்கவும், விதை வங்கிகளை உருவாக்கவும், குழுக்களை அமைக்கவும் ‘கிரீன் காஸ் ஃபவுண்டேஷன்’ அமைப்புடன் ‘பயோ டைவர்சிட்டி இன்டர்நேஷனல்’ நிறுவனம் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள மொரப்பாக்கத்தில் ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது.

‘சீட்ஸ் ஃபார் நீட்ஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தத் திட்டம் முதன்முதலில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் தொடங்கப்பட்டது. இரண்டாம்கட்டமாக இந்தத் திட்டம் மொரப்பாக்கம் கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது என்று பயோ டைவர்சிட்டி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தேசியப் பிரதிநிதியான கிருஷ்ண குமார் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.ராமசாமி தொடங்கி வைத்தார். மேலும் வேளாண் திட்டங்கள் வெற்றியடையப் பெண்களுக்கு அதிகாரமளித்தல் முக்கியமாகும் என்று அவர் பேசினார். பெண்களின் பங்கேற்பு இல்லாமல் விவசாயப் பணிகள் வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் அவர் கூறினார்.

கிருஷ்ண குமார் பேசுகையில், “தற்போது ஒவ்வோர் ஆண்டுக்கும் சுமார் 268 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 45 மில்லியன் டன் தானியங்கள் கிடங்குகளில் சேகரித்து வைக்கப்படுகின்றன. இயற்கை முறையில் விவசாயம் செய்யவும், உணவு தானிய வங்கிகளை உருவாக்கவும் விவசாயிகள் முன்வர வேண்டும். இதனால் நம் சொந்த மண்ணின் விதைகள் அடங்கிய களஞ்சியம் உருவாக்கப்படும். நம் பாரம்பர்ய தானியங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் தற்போது விவசாய அரங்கில் உருவாகியுள்ளது.

நிலையான இயற்கை விவசாயத்தின் மூலம் பருவநிலை மாறுதலை நாம் எதிர்கொள்ள முடியும். ஆனால், கடந்த சில வருடங்களில் அளவுக்கு அதிகமான ரசாயன உரங்களால் மண்ணின் வளம் கெட்டுவிட்டது. பஞ்சாபில் ‘கேன்சர் எக்ஸ்பிரஸ்’ என்ற ரயில் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மும்பைக்குக் கொண்டுவரப்பட்டுச் சிகிச்சையளிக்கப்படுகிறார்கள். இயற்கை விவசாயத்துக்கு நாம் உடனடியாக மாற வேண்டும் என்பதையே இந்தப் பாதிப்புகள் அனைத்தும் காட்டுகின்றன” என்று அவர் கூறினார்.

ஆரோக்கியமான மண்ணில் பூச்சிகள் மற்றும் புழுக்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்பதை விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும். மண் வளத்துடனும், உயிருடனும் இருக்கிறது என்பதை விவசாயிகள் அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகும் என்றும் கிருஷ்ண குமார் தெரிவித்தார்.

“கடந்த 50 வருடங்களாக முன்னேற்றம் என்ற பெயரில் பல விளைநிலங்கள் கட்டடங்களாக மாற்றப்பட்டு விட்டன. அப்படியென்றால் அடுத்த 40 ஆண்டுகளில் சுற்றுச்சூழலில் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். லட்சக்கணக்கான மரங்கள் அழிந்துவிட்டன. நூற்றுக்கணக்கான விதை மற்றும் பயிர் வகைகள் காணாமல் போய்விட்டன. இவை பற்றிய எந்தத் தகவலும் சேகரிக்கப்படவில்லை. நம்மால் இயன்ற அளவுக்குத் தொலைந்துபோன விதைகளை மீட்டுப் பாதுகாக்க வேண்டிய நேரம் இது. இவற்றைப் பாதுகாக்கவும், விவசாயிகளை ஊக்குவிக்கவும் பயோ டைவர்சிட்டி இன்டர்நேஷனல் நிறுவனம் அனைத்து உதவிகளையும் வழங்குகிறது. இந்த முயற்சி, விதைகளை நாம் அனைவரும் ஒரு சமூகமாக இணைந்து பாதுகாப்பதற்கான ஒரு அணுகுமுறையாகும்” என்றும் அவர் கூறினார்.

விவசாயிகளைக் குழுக்களாக ஒருங்கிணைத்து விவசாயம் செய்ய வைக்கவும், அரசு திட்டங்களின் பலன்களை விவசாயிகளுக்கு வழங்கவும் ‘கிரீன் காஸ்’ நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறது. பெரும்பாலான விவசாயிகள் அரசின் திட்டங்கள் பற்றிய விழிப்பு உணர்வே இல்லாமல் இருப்பதாக இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது வறட்சி அதிகரித்துள்ளதால், நீர்ப்பாசன திட்டங்களுக்கு முழு மானிய உதவியை வேளாண்துறை வழங்குகிறது. இதனால் விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனால், பெரும்பாலான விவசாயிகள் இதுபற்றிய விழிப்பு உணர்வே இல்லாமல் இருக்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் சுமார் 100 விவசாயிகள் கலந்துகொண்டனர். பாரம்பர்ய பயிர்களைப் பயிரிடுவதற்கு மட்டுமல்லாமல் அவற்றைச் சந்தைப்படுத்தவும் இந்தத் திட்டம் உதவ வேண்டுமென்று ஏராளமான விவசாயிகள் கூறினர். தற்போதைய நிலையில், பாரம்பர்யப் பயிர்களின் மதிப்பு பற்றியும் விலை பற்றியும் அரசு மண்டிகளுக்கு விழிப்பு உணர்வு இல்லை.

முன்னணி விதைப் பாதுகாவலரும், இயற்கை விவசாயியுமான நெல் ஜெயராமன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். “இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்கு அனைவரும் உறுதியளித்தால், பயிர்களைச் சந்தைப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும்” என்று ஜெயராமன் உறுதியளித்தார்.

“தமிழ்நாட்டில் மட்டும் நூற்றுக்கணக்கான விவசாயிகளை எங்களின் குழு இணைத்துள்ளது. பாரம்பர்ய விதைகளைப் பாதுகாக்க ஏராளமான விவசாயிகள் அவற்றைப் பயிர் செய்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் நாங்கள் இரண்டு கிலோ பாரம்பர்ய அரிசி வகைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். ஆனால், அதே அரிசி வகையில் நான்கு கிலோவை திருப்பித் தருவதாக உறுதியளிக்கப்பட்டால் மட்டுமே அவர்களுக்குப் பாரம்பர்ய அரிசி வகைகளின் விதைகள் வழங்கப்படும். இதனால் எங்களின் விதை வங்கியில் எப்போதும் விதைகள் இருக்கின்றன. அவற்றைத் தேவைப்படும்போது விவசாயிகளுக்கு விநியோகித்து வருகிறோம்” என்றார் ஜெயராமன்.

“சில விவசாயிகள் கூட்டாக இணைந்து 20 முதல் 50 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்தால் பாரம்பர்ய விதைகளை மீட்டெடுத்துப் பாதுகாக்க முடியும். இந்த வேலையை முறையாகச் செய்ய எங்களுக்கு ஒரு விவசாயிகளின் படையே வேண்டும். கடந்த சில வருடங்களாக நாங்கள் இந்தப் பணியை சிறப்பாகச் செய்து வருகிறோம்” என்றும் ஜெயராமன் கூறினார்.

கிரீன் காஸ் ஃபவுண்டேஷனுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை பயோ டைவர்சிட்டி இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்கி வருகிறது. சிறு விவசாயிகளுடன் இந்நிறுவனம் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்நிறுவனத்தைப் பற்றி மொரப்பாக்கத்தைச் சுற்றியுள்ள ஏழு கிராமங்களைச் சேர்ந்த சில ஆயிரம் விவசாயிகளிடத்தில் விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது.

இத்திட்டம் பற்றி மேலும் அறிய கிருஷ்ண குமாரைத் தொடர்புகொள்ளலாம்.

அலைபேசி எண்: 8447284636,

இமெயில்: [email protected]

நன்றி: தி வயர்

தமிழில்: அ.விக்னேஷ்

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon