மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

சிறப்பு அந்தஸ்து ரத்தாகுமா? பதற்றத்தில் காஷ்மீர்!

சிறப்பு அந்தஸ்து ரத்தாகுமா? பதற்றத்தில் காஷ்மீர்!

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து விவகாரம் குறித்து காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று சந்தித்து பேசினார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஒரே சட்ட அமைப்பின்கீழ் செயல்பட்டுவரும் நிலையில், காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும் மற்ற மாநிலங்கள் போலன்றி, இந்திய அரசியல் சட்டம் ஆர்டிக்கல் 35ஏ-வின்கீழ் கூடுதலாகச் சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் காஷ்மீரில் சொத்துகள் வாங்க முடியாது. அரசு வேலையில் சேர முடியாது.

‘நாடு சுதந்திரமடைந்தபோது, சிறுபான்மையினர் அதிகம் வசித்தனர் என்ற காரணத்துக்காக வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டம் எதற்கு இன்னும் தொடர வேண்டும்?’ என்று நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. அதையடுத்து, ‘இந்தச் சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று சமூக அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ‘இந்தச் சட்டத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது?’ என்று உச்ச நீதிமன்றமும் கேள்வி எழுப்பியதையடுத்து இந்தச் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்படுவதற்கான நிலையேற்பட்டுள்ளது.

அதன் காரணமாக, காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘சிறப்பு சட்டத்தை ரத்து செய்யக் கூடாது’ என்று அம்மாநிலத்தின் அனைத்துக்கட்சியினர் உட்பட பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் காஷ்மீரில் கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், இதுகுறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவும் மத்திய அரசுக்குக் கடுமையாக எச்சரிக்கை விடுத்து, முதல்வர் மெகபூபா முப்தியையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த நிலையில், காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி நேற்று ஆகஸ்ட் 11ஆம் தேதி டெல்லிக்கு வருகைபுரிந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது காஷ்மீர் விவகாரம் சம்பந்தமாக மாநிலத்தில் எழுந்துள்ள நிலைமை குறித்துப் பேசியதாகத் தெரிகிறது. அதன்பேரில் மத்திய அரசு சார்பில் எந்த முக்கிய பிரமாணத்தையும் தாக்கல் செய்ய வேண்டாம் என அரசு வக்கீல் வேணுகோபாலிடம் உள்துறை தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது. ஏற்கெனவே மத்திய அரசுக்கு இருக்கும் பிரச்னைகளில், இந்தப் பிரச்னையை வேறு எதற்குக் கையில் எடுத்துக்கொண்டு கையைச் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று நினைத்ததையடுத்து, காஷ்மீர் பிரச்னையைத் தள்ளிப்போடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon